பக்கம் எண் :

பொருளதிகாரம்43

‘யாமெடுத் தணைத்தொறுந்1தாமியைந் தெழுதல்.’

என்பது, இருகையுமெடுத்தல்; அங்ஙனம் ஒடுங்கிய வழியும் உயிர்ப்பினளல்லள்போலத் தோள்களைத்2தன்வயத்தவாயின என்றமையின்.

‘இம்மை யுலகத் தன்றியு நம்மைக், கேளறிந்தன.’

என்றமையின், இருவர் அன்பும் எழுமையுந் தொடர்ந்த 2உழுவலன்பெனச் சொல்லித் தன்னிலையுரைத்தானாம். பிறவும் அன்ன.

(15)

[புணர்ச்சிப்பின்னர் களவு வெளிப்படுந்துணையு நிகழும் முப்பகுதியுள் முதற்பகுதியாகும் நான்காம்பகுதி இத்துணையது எனல்]

264. பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்த
லீரமில் கூற்ற மேற்றலர் நாணல்
கொடுப்பவை கோட லுளப்படத் தொகைஇ
யெடுத்த நான்கே நான்கென மொழிப.

இது, நான்காம்பகுதி கூறுகின்றது.

இ-ள் :  பாராட்டெடுத்தல்--புணர்ச்சி நிகழ்ந்தபின்னர்த் தலைமகளை 4இயற்பட நினையுங் குறிப்பும்; இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன்மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.

மடந்தபவுரைத்தல்--விளையாடும் பருவத்து நிகழ்ந்த 5அறிமட நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்றுதலும்; உரைத்தலென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை 6மேலை


1. தாமியைந் தெழுதல்--தோள்கள் தாமாக வியைந் தெழுதல் என்க. இயைதல்--உடன்படல்.

2. தன்வயத்தவாதல்--தோள்கள் தாமே எழுதல்

3. உழுவலன்பு--பேரன்பு

4. இயல்--ஒழுக்கம்.

5. அறிமடம்--விளையாட்டையே அறியு மடமை. என்றது அதனையே பற்றிநிற்கும் அறிவுடையளாதலை.

6. மேலையோத்து--களவு கற்பு முதலியன. ஆண்டுக காட்டிய சூத்திர உதாரணங்களுள் தோழிக்கு அறிமடம் நீங்க உரைத்தமை காண்க என்றபடி.