பக்கம் எண் :

பொருளதிகாரம்47

நான்கினோடு 1வருகின்றதற்குச் சிறிது இடையறவும்படு மென்பது கொள்க.

புகுமுகம் புரிதன் முதலாயின நான்குந் தலைமகளனவேயாகி ஓரினத்தவாயின. அவற்றுப் பின்னர்த் தலைமகன் அவளைப் பொருந்தியவழிக் கூழை விரித்தன் முதலாயின நான்கும் நிகழந்தமையின் அவையும் அவற்றோடு சிறிது இடையறவுபட்டன. அல்குறைவரன் முதலாயின நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோடொன்றாது வேறாயின. பாராட்டெடுத்தன் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற் சிறிது வேற்றுமையுடைய. தெரிந்துடம் படுதன் முதலாயின களவு வெளிப்படுத்தற் குறிப்பினவாகலின் மேலனவற்றோடு தழுவாது வேறாயினவென்பது. இவற்றொடும் வருகின்ற நான்கன் வேறுபாடு ஆண்டுச் சொல்லுதும் அவ்வாறு நோக்கியன்றே இவ்வாறு சூத்திரப் பொருளினையும் இருபத்து நான்காக உடனோதாது வேறுபடுத்தோதிய கருத்தென்பது. இங்ஙனம் பொருத்தமின்றி வருவனவல்ல நந்நான்கு பகுதியாற் கூறியவை தம்முட்டாமென்பான் ‘பொருந்திய நான்கு’ என்றா னென்பது. இவற்றுக்குச் செய்யுள்:--

“அறியாய் கொல்லோ நீயே தெறுவர
 நோக்குதொறும் பனிக்கு நெஞ்சமொ டிவளே
 யாய்க்கறி வுறாலி னின்னெதிர் நாணி
 மனைவயிற் பிரியலண் மன்னே யதற்கே
 நினைவில ளிவளென வுரைத்தி
 புனைதார் மார்ப காண்டியோ வதுவே.”

(இ. வி. ப. 534)

என்பது, பகற்குறிக்கட் டலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவு கடாயது. இதனுள் ‘யாய்க்கறி வுறாலின்’ என்பது, தெரிந்துடம்படுதலென்பது; என்னை? அவள் நோக்குதொறும் 2பனித்தலென் றறிவுறுத்தா ளென்றமையின். ‘நின்னெதிர் நாணி’ என்பது, திளைப்பு வினைமறுத்தல்; என்னை? தமர்க்கு மறைத்தாள் இம்மறையினை


1. வருகின்றதற்கு என்றது நான்கு நான்காகக் கூறிய ஒவ்வொன்றற்கும் பின் வருவன. அது பின்னர்ப் பேராசிரியரால் விளக்கப்படுகின்றது.

2. பனித்தலென் றறிவுறுத்தாள் என்பது பனித்தலின் அறிவுறுத்தாள் என்றும் பாடமுள்ளது அதுவே பொருத்தம்; என்னை? பனித்தல் அறிவுறுத்தற்கேதுவாகலின்.