யென்று தலைமகன் குறிக்குமென நாணி எதிர்ப்படாமையின். ‘மனைவயிற் பிரியலள்’ என்பது கரந்திடத்தொழிதல். ‘புனைதார் மார்ப காண்டியோ வதுவே’ என்பது, கண்டவழி உவத்தல்; என்னை? நிற்கண்டவழி நுதலுந் தோளும் பசலை நீங்கியவாறு கண்டிலையோ வென்னுங் 1குறிப்பினாற்2கூறினமையின். பிறவும் அன்ன. (17) [ஆறாம்பகுதி இத்துணையது எனல்] | 266. | புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே யாறென மொழிப. |
இஃது ஆறாவது கூறுகின்றது. இ-ள் : புறஞ்செயச் சிதைதல்--பூவுஞ் சாந்தும் பூணுந் துகிலும் முதலாயின கொண்டு 3புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவுண்டாதலும்: மேல்நின்றது கண்டவழி உவத்தலாகலானும், இது 4காணாதவழி நிகழ்கின்றதாகலானும், அதற்கினமின்றியும் அதன்வழித் தோன்றியதெனப்படுமாகலான் இதனை இச்சூத்திரத்தின்முன் வைத்தானென்பது. புலம்பித் தோன்றல்--அங்ஙனம் புனைந்தகோலந் 5துணையொடு கழியப் பெறாமையிற் புல்லென்றழிந்த நெஞ்சினளாகலான், எல்லாச் சுற்றத்தார்க்கும் இடைநின்றேயுந் 6தனிய ளென்பது அறிவியா நிற்றலும்.
1. குறிப்பு--உவகையையுணர்த்துங் குறிப்பு. 2. கூறியது தோழி என்க. 3. புறத்தே கோலஞ்செய்வோர்--செவிலி முதலாயினோர். அகத்தே தலைவிக்குச் சிதைவுண்டாயதற்குக் காரணம் அக்கோலத்தைத் தலைவன் காண்டலை நினைத்தமை என்க. 4. காணாதவழி--தலைவனைக் காணாத வழி. 5. துணை--தலைவன். கழிய--காலங்கழிய. 6. தனிமை -- தலைவன்பால் அறிவு கிடந்தமையானுண்டாயது. எனவே சுற்றத்தாரிடை நின்றும் அவரிடை நில்லாதவள் போல அவரை மறந்து நிற்றல். |