கலங்கி மொழிதல் -- கையொடுபட்ட கள்வரைப்போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றந் தோன்றச் சொல்லுதலும்; அஃதாவது, தன்மனத்து நிகழாநின்றன தன்னையறியாமற் சில புலப்படச் சொல்லுதலாயிற்று. கையறவுரைத்தல்--கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதலும்; அஃதாவது, 1வன்புறை யெதிரழிந்து சொல்லுவனபோல்வன. புலம்பிய நான்கே ஆறென மொழிப--இவை நான்குந் தனிமை விகற்பமாகிய ஆறாங்கூற்று என்றவாறு. கையறவுரைத்தலென்பதனை ஈற்றுக்கண் வைத்தான் களவொழுக்கத்தினுள் 2இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படா தென்றற்கு. என்னை காரணமெனின், கையறவுரை தோன்றிய தற்பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி 3நற்காமத்துக்கு ஆகாவென்பது கருத்து; என்னை? 4கையறவுரைத்தலென்பது ‘சொல்லாமரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்குதலை’ (196) எல்லையாகவுடைமையின், அதனினும் இறப்பத் தோன்றுவன 5மன்றத்திருந்த சான்றவரறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியுங் கூறி அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் புள்ளொடு சொல்லியுந் நிகழும் மெய்ப்பாடாகலான், அவை ‘நடுவணைந்திணை’ எனப்பட்ட நற்காமத்திற்கு இலக்கணவகையான் ஏலாவாகலினென்பது. கையறவு உரைத்தலென்றதனான் இம் மெய்ப்பாடு மனத்தளவேயன்றி 6மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படு மென்பது கொள்க.
1. வன்புறை--வற்புறுத்தல். எதிரழிந்து கூறல்--தோழி வற்புறுத்தவுங் கேளாது எதிரழிந்து சொல்லல். 2. இதனினூங்கு--இதனின் மேற்பட. 3. நற்காமம்--அன்புடைக்காமம். 4. கையறவுரைத்தல் என்பது உடைமையின் இறப்பத் தோன்றுவன மெய்ப்பாடாகலான் அவை ஏலா என இயைக்க. உடைமையின் ஏலா என முடியும். 5. மன்றத்திருந்த சான்றவரறியக் கூறுவதை, கலி. 142-ம் செய்யுள் நோக்கி யறிக. 6. மாற்றம்--சொல். |