பக்கம் எண் :

50மெய்ப்பாட்டியல்

இவை எல்லாம் முறையானே நிகழ்ந்தமைநோக்கி 1யாழோர் கூட்டத்தினைத் தொன்மையுந் (549) தோலும் (550) போலப் 2பொருட்டொடர் நிலையாக்கி உரைப்பாருமுளர். அஃது ஆகாமைக்குக் காரணங் களவியலுட் (101) கூறினாமென்பது. இவற்றுக்குச் செய்யுள்:

“இவளே,
அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇப்
பல்கிளை நாப்ப ணில்கிளை போல
மொழிவகை யறியாள் பொழிகண் ணீர்துடைத்
தியானே கையற வலம்வருங்
கூறாய் பெருமநிற் றேறு மாறே.”

(இ. வி. ப. 535)

என்பது, வரைவுகடாயது; இதனுள் ‘அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ’ என்பது புறஞ்செயச் சிதைதல். ‘பல்கிளை நாப்ப ணில்கிளை போல’ என்பது புலம்பித் தோன்றல். ‘மொழிவகை யறியாள்’ என்பது கலங்கி மொழிதல். ‘யானே கையற 3வலம்வரும்’ என்பது கையறவுரைத்தல்; என்னை? தன் கண்ணீர்துடைத்தலும் ஆற்றாவென்றமையின். பிறவும் அன்ன.

(18)

[மேற்கூறியவும் பிறவும் நடுவணைந்திணைக்
காமவொழுக்கத்துக்குக் காரணம் எனல்]

267. அன்ன பிறவு மவற்றொடு சிவணி
மன்னிய வினைய நிமித்த மென்ப.

இது மேலனவற்றுக்கு ஓர் புறனடை.

இ-ள் : அன்ன பிறவும்--மேற்சொல்லப்பட்ட இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும், அவற்றொடு சிவணி--அவற்றின் வேறன்றி அவை தம்முட் பகுதியாகி வருவன பிறவும், மன்னிய வினைய நிமித்தம் என்ப--நிலைபெறத் தோன்றுங் காமவொழுக்கத்து நிமித்தமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.


1. யாழோர் கூட்டம்--கந்தருவ மணம். யாழோர் கூட்டத்தினை என்ற பாடமே பொருத்தமாதல் காண்க.

2. பொருட்டொடர்நிலை என்பது கோவைஎன்னும் பிரபந்தத்தைக் குறித்தது போலும்.

3. அலம்வரல்--சுழற்சியுறல்.