‘மன்னிய 1வினைய’ என்பது நடுவணைந்திணைக்கே யுரிய மெய்ப்பாட்டினவை என்றவாறு: என்னை? கந்தருவ வழக்க மல்லனவற்றை மன்னிய காம மென்னாரன்றே, 2அஃது இடையறவு படாதாகலின். எனவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் வரையறையின்றி வேண்டியவாறு வரப்பெறுமென்பதாம்; அவை 3மன்னிய வினையல்லாமையின்; என்னை? ‘காமஞ் சாலா விளமை யோள்வயி--னேமஞ் சாலா விடும்பை யெய்துதலும்’ (50) நாற்பத்தெட்டியாண்டையானோடு பன்னீராட்டையாள் கூட்டஞ் சொல்லுதலும் ஒத்த காமமெனப்படா வாகலி னென்பது. இவ்வாறு கூறவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் இவை வைத்த முறையான் வரையறுத்துக் கூறப்படாவெனவும், அவை வருவன வந்துழிக் கொள்ளப்படூஉமென்பதும் பெற்றாம். இது 4புலனெறி வழக்கமல்லாத கந்தருவ மணத்திற்கும் ஒக்கும். ‘அன்ன பிறவு மவற்றொடு சிவணி’ (267) வருவன யாவையெனின், புகுமுகம் புரிதற்கட் டலைமகன் நோக்கியவழி ஒரு வல்லிப் பொதும்பரானும் மற்றொன்றானுஞ் சார்புபெற்று மறைதலும் அவையில்லாதவழி இடர்ப்படுதலு மென்றாற் போல்வன புகுமுகம் புரிதலாயடங்கும். நகுநயமறைக்குங்கால் தலைமகன்கட்டோன்றிய நகை முதலாகிய குறிப் பேதுவாக, நகை தோன்றியதனை மறைக்குங்கால் 5இதழ் மொக்குளுள் தோன்றுவது நகையெனப்படாது நகுநய மறைத்தலின்பாற் படுமென்பது. இனிச் சிதைவு பிறர்க்கின்மையின் கண்ணும், “நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும்.”
1. வினை--காம ஒழுக்கம்; வினைய நிமித்தம்--காமஒழுக்கத்திற்குரிய நிமித்தங்கள். நிமித்தம்--ஏதுவான மெய்ப்பாடுகள். 2. அஃது--கந்தருவ ஒழுக்கமாகிய அஃது. இடையறவு படாமை--அன்பு இடையில் அற்றுப்போகாமை. எனவே ஏனைய இடையறவு படும் என்றபடி. 3. மன்னியவினை--அன்பு நிலைபெற்ற காம ஒழுக்கம். எனவே ஒத்தகாமம் என்றவாறு. 4. புலனெறி வழக்கம்--செய்யுள் வழக்கம். அஃது அல்லாத கந்தருவமணம் உலகியலான கந்தருவ மணம். 5. இதழ் மொக்குளுட்டோன்றுவது--உதட்டினுட் டோன்றுவது. என்றது இதழ்க்குவிவுட் டோன்றுவது என்றபடி. |