யறுத்துக் கூறினானென்பது. மற்றிவற்றை ‘நிமித்தம்’ என்ற தென்னையெனின், இவை முறையானே நிகழ்ந்து புணர்ச்சி நிகழுமாகலினென்பது. ‘வினைய’ என்பது ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு. இம் மெய்ப்பாட்டினுட் கைக்கிளை பெருந்திணைக்கு வருவன வருமாறு: “ஒருக்குநா மாடுங் குரவையு ணம்மை யருக்கினான் போனோக்கி யல்லனோய் செய்தல் குரூஉக்கட் கொலையேறு கொண்டேன்யா னென்னுந் தருக்கன்றோ வாயர் மகன்.” (கலி. 104) எனப் புகுமுகம் புரிதல் கைக்கிளைக்கண் வந்தது. 1”முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே.” (105) என்பதனான் இது கைக்கிளையெனப்பட்டது. மற்றிது முல்லைத் திணைப்பாட்டன்றோவெனின், அது 2நிலத்தான் முல்லையாயிற்றென்பது அகத்திணை யியலுட் கூறினாம். இனித் தொன்மையுந் (549) தோலும் (550) முதலாயின வனப்புக்களுட் புகுமுகம் புரிதன் முதலாயின பெருந்திணைப் பொருள்பற்றி வருவன வருமாறு அறிந்துகொள்க. மற்றிவ்விருபத்துநான்கு மெய்ப்பாடுங் கற்பினுள் இம்முறையானே வரப்பெறாவோவெனின், அதற்கு இம்முறையான் இவையனைத்தும் வரல் வேண்டுவதின்மையிற் களவிற்கே விதந்து கூறினானென்பது. அஃதென்னைபெறுமாறெனின், ‘பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்’ (665) என்னும் உத்திவகை. இனிக் கற்பினுள் வருவன வருமாறு: “இனிதெனக் கணவ னுண்டலி 3னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” (குறு. 157) என்பதனுள், நகுநய மறைத்தல் வந்தது.
1. முன்னைய மூன்று--ஆசுரம், இராக்கதம், பைசாசம். 2. நிலத்தான் முல்லையெனவே ஒழுக்கத்தாற் கைக்கிளை என்றபடி. ஏறும், ஆயரும் முல்லைக் கருப்பொருள்கள். குரவையாடல் அந்நிலத்தார் தொழில். 3. நுண்ணிதின் மகிழ்ந்தன்று என்றதனால் நகுநயம் மறைத்தலாயிற்று. நுண்மை--நுட்பம். |