பக்கம் எண் :

576பொருளதிகாரம்

இடந்தலைப்பாடு 1நிகழுமதானே துணை வேண்டுமென்பது; என்னை? துணையின்றி நிகழுங் களவு சிறப்புடைத்தாகலானும் பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத்தொழுகுமாகலானுமென்பது. களவொழுக்க மெல்லாம் இந் நான்குவகையானும் அடங்கும். அவற்றுக்குச் செய்யுள்,

“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
 காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
 பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
 செறியெயிற் றரிவை கூந்தலி
 னறியவு முளவோ நீயறியும் பூவே.”

(குறுந். 2)

என்னும் பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள்.

“சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்
 றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்
 காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ
 கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப்
 புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின்
 றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
 கண்ணே கதவ வல்ல நண்ணா
 ராண்டலை மதில ராகவு முரசுகொண்
 டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன்
 பெரும்பெயர்க் கூட லன்னநின்
 கரும்புடைத் தோளு முடையவா லணங்கே.”

(நற்றிணை--36)

என்பது, இடந்தலைப்பாடு.

“இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
 நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 கையி லூமன் கண்ணிற் காக்கும்
 வெண்ணெ யுணங்கல் போலப்
 பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.”

(குறு. 58)

என்பது, பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது.

“தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
 கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
 புணைகை விட்டுப் புனலோ டொழுகி
 னாண்டும் வருகுவள் போலு மாண்ட
 மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
 செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட்
 டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.”

(குறு. 222)

என்பது, தோழியிற் கூட்டம். பிறவும் அன்ன.

(186)


1. நிகழுமதானே--நிகழாதாயினே என்றிருத்தல்வேண்டும். என்னை துணை வேண்டற்குக் காரணமதுவாதலின். நச்சினார்க்கினியருரை நோக்குக.