பக்கம் எண் :

பொருளதிகாரம்577

[கற்பாவது இதுவெனல்]

499.1மறைவெளிப் படுதலுந் 2தமரிற் பெறுதலு
மிவைமுத லாகிய வியனெறி திரியாது
3மலிவும் புலவியு மூடலு 4முணர்வும்
5பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.

இது, கற்பென்னுங் கைகோளுணர்த்துத னுதலிற்று.

இ--ள் : மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும் அதன்பின் தமர்கொடுப்பத் தான் அவ்வகையாற் பெறுதலுமென்னும் இவ்விரண்டும் முதலாகிய வழக்குநெறி திரியாது மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் 6உணர்த்தலுமென்னும் நான்குடன் பிரிவுளப்பட்ட ஐந்தும் புணர்ந்தது கற்பென்னுங் கைகோளாம் என்றவாறு.

‘இவைமுதலாகிய’ என்றதனால்,

“கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே
 புணர்ந்துடன் போகிய காலை யான.”

(143)

என்றவழிக் 7கூடிய வதுவைபோல்வன கொள்க. அவைதாங் கற்பெனப்படுவதல்லது ஒழுகலாறெனப்படா; என்னை? இவரொழுக்கமன்றி வேள்வியாசான் முதலாயினார் செய்விக்கும் ஒழுக்கமாகலான். அங்ஙனமாயினும் அவற்றையுங் கைகோளின்பாற் சார்த்தி யுணரப்படு மென்றற்கு ஈண்டுக் கூறினானென்பது.


1. மறை வெளிப்படுதல்--களவு வெளிப்படுதல்.

2. தமரிற் பெறுதல்--வரைவு.

3. மலிவு--மகிழ்ச்சி.

4. உணர்வு=உணர்தல். என்றது ஊடறணிதலை. உணர்த்தல் என்று பொருள் கூறல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. இளம்பூரணம் நோக்குக.

5. பிரிவு--ஓதற்பிரிவு முதலியன.

6. உணர்த்தல்--உணர்தல் என்றிருத்தல்வேண்டும். விரிவுரை நோக்குக. உதாரணமும் நோக்குக.

7. கூடிய--நிகழ்ந்த.