1இனிக் கூறும் ஐந்தும், தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவேபடும். 2முன்னைய இரண்டும்போலப் பிறர் கொடுக்கப்பட்டனவல்லவென்பது. மலிதலென்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றான் மகிழ்தல். புலவியென்பது, புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடலென்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியானன்றிக் கூற்றுமொழியானுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய பொருளின்மை 3யுணர்வித்தல் உணர்வெனப்படும். இல்லது கடுத்த மயக்கந்தீர உணர்த்துதலால் உணர்த்துதலெனவும், அதனை உணர்தலால் உணர்வெனவும்படும்; புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா. அது குளிர்ப்பக் கூறலுந் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின். அம்முறையானே கூறி அவற்றுப்பின் பிரிதல் கூறினான். அஃது இவை நான்கனொடும் வேறு படுதலின்; அதனை ஊடலோடு வைக்கவே அவ்வூடலிற் பிறந்த 4துனியும் பிரிவின்பாற்படுமென்பது கொள்க. என்னை? 5காட்டக் காணாது 6கரந்து மாறுதலின். இவற்றுக்குச் செய்யுள்: “எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே.” (அகம். 165) என்பது, மறைவெளிப்பாடு. “தமர்தர, வோரிற் கூடி யுடன்புணர் கங்குல்.” (அகம். 86) என்பது, தமரிற்பெறுதல்.
1. இனி--மேல்; என்றது மலிதன் முதலாகக் கூறுவனவற்றை. 2. முன்னைய இரண்டென்றது--மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும். 3. உணர்வித்தல்--உணர்தல் என்றிருத்தல்வேண்டும். அல்லது உணர்வு--உணர்த்தல் என்றிருத்தல்வேண்டும். 4. துனி--ஊடலின்மிக்கது. ‘துனியும் புலவியு மில்லாயின்’ என்னுந் தேவர் குறளுரை நோக்குக. 5. காட்டக்காணாது--உணர்த்த உணராது. 6. கரந்துமாறல்--உள்ளங்கரந்து வேறுபடல். மாறுதல்--வேறுபடல், ஒழிதல். |