பக்கம் எண் :

பொருளதிகாரம்579

“கேள்கே டூன்ற.”

(அகம். 93)

என்னும் அகப்பாட்டினுள்,

“நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப
 முயங்குகஞ் சென்மோ நெஞ்சே.”

என்பது மலிதல்.

“நாணுக்கடுங் குரைய ளாகிப்
 புலவி வெய்யள்யா முயங்குங் காலே.”

என்பது, புலவி.

“நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை
 நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்.”

(கலி. 77)

என்பது, ஊடல்.

“விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு
 மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு
 மாங்கவிந் தொழியுமென் புலவி.”

(கலி. 75)

என்பது, உணர்தல்.

“திறனல்ல யாங்கழற யாரை நகுமிம்
 மகனல்லான் பெற்ற மகன்.”

(கலி. 86)

என்பது, துனி. துனித்தலென்பது, வெறுத்தல். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும். அவை 1மேற்காட்டப்பட்டன.

(187)

[கைகோள்வகை இவை எனல்]

500. மெய்பெறு வகையே கைகோள் வகையே.

இது, புறத்திணைக் கைகோளுணர்த்துகின்றது.

இ--ள் : பொருள்கள் பெற்ற கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே என்றவாறு.

கைகோளென்பது, ஒழுக்கங்கோடல்; எனவே, அகத்திற்குப் புறனாயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா; பொதுவகையானே 2மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடுமென இரண்டாகி அடங்கும் அவையுமென்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காட்டப்பட்டன.

(188)


1. மேற்காட்டப்பட்டன என்பதை, தொல்.--அகத்திணையியல் 25-ம் சூத்திர முதலியன நோக்கி அறிக.

2. மறைந்த ஒழுக்கம்--வெட்சிக்கண் நிரைகாவலர் அறியாமற் சென்று கவர்தல். வெளிப்பாடு--கவர்ந்தமை பின் வெளிப்படல். ஒழிந்த திணை--வஞ்சி முதலியன.