பக்கம் எண் :

பொருளதிகாரம்585

[இடைச்சுரத்துத் தலைவன் நீதிநூல் விதிப்படி
தலைவியொடு கூறற்குமுரியன் எனல்]

506.இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு
வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன்.

இதுவும், கூற்று விகற்பமே கூறுகின்றது.

இ--ள் : இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடும் கிழவன் நீதிநூல்வகையாற் கிளத்தற்குமுரியன் என்றவாறு.

நீதிநூல்வகையாற் கிளத்தலென்பது, கிழத்தி தன்தமர் இடைச்சுரத்துக் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குக் சொல்லுவானாய் 1வழக்கியல் கூறுதலுமுரியனென்பது ‘வழக்கியலாணை’ என்றதனான் நீதிநூல் விதி 2பிறழக் கூறின் அஃது இராக்கதம்போன்று காட்டுமென்பது. உம்மையாற் கிழத்தியொடு வழக்கியலாணையானன்றி மருட்டிக் கூறவும்பெறுமென்பது.

 “அழிவிலர் முயலு மார்வ மாக்கள்
வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்
கலமரல் வருத்தந் தீர யாழநின்
னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
5பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் டோறு நெடிய வைகி
மணல்காண் டோறும் வண்ட றைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
10மாநனை கொழுதி மகிழ்குயி லாலு
நறுந்தண் பொழில கானங்
குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே.”

(நற்றி. 9)

என்பதனுள், ‘வருந்தாதேகுமதி’ எனவே, ‘வழிபடு தெய்வங் கட்கண்டால்’ விடுவார் இல்லாததுபோல நின்னை விடுதல் எனக்கு அறனன்றெனக் கூறி மெல்லெனச் செல்கவென மருட்டிக் கூறியவாறு காண்க.

(194)


1. வழக்கியலாற் கூறல்--நின் தமர்வரின் அவரைக் கொல்லேன் என்றல். உதாரணம் “வினையமையாவையினியலி” . . . . . .என்னுந் நற்றிணை 362-ஞ் செய்யுளில், “நுமர்வரி மறைகுவன் மாஅயோளே” என்னுமடியானும், “நுமர்வரி னோர்ப்பினல்ல தமர்வரின்--முந்நீர் மண்டில முழுவது மாற்றா--தெரிகணை விடுதலோ விலனே--யரிதமர் மழைக்கண் கலுழ்வகையெவனே.” என்னுஞ் செய்யுளானுமறிக.

2. பிறழக் கூறின் என்றது அவரைக் கொல்வேன் எனக் கூறலை. கொன்றுகோடலும் இராக்கதமாதலின் கொல்வேனென்றலு மிராக்கதமாயிற்று.