இ--ள் : முன்னர்க் கூற்றிற்குரியரெனப்பட்ட பன்னிருவருட் கேட்டற்குரியார் தலைமகனும் தலைமகளும் ஒழித்து ஒழிந்த பதின்மரும் என்றவாறு. 1அவர் கேட்பனவும் அவ்விருவர் கிளவியுமேயெனவும் 2தத்தங் கிளவி கேளாரெனவுங் கூறியவாறு. ‘மனையோள் கிளவியுங் கிழவன் கிழவியும்’ என்பதனை, மேற்போயின கூற்றிற்குங் கூட்டியுரைக்க. உரைக்கவே கூறுவனவுங் கேட்பனவுமெல்லாம் அவ்விருவர் கிளவியுமேயெனவும், தத்தங் கிளவி கூறவுங் கேட்கவும்பெறாரெனவுங் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கப்பட்டனவற்றுள் வேறுபட வருவனவும் 3மேற் கூறுகின்றாம். 4மற்றுக் கூற்றுக்கு உரியரெனப்படுவார் அவ்வயின் தலைவியுந் தலைவனுங் கூறக் கேளாரோவெனின்,--அவை 5தங்கிளவியாகலின் தாங்கேட்டல் விதந்தோதவேண்டுவதன்றென்பது. ‘நினையுங்காலை’ என்றதனால், தலைமகள் சொல்லக் கேட்போரும், தலைமகன் சொல்லக் கேட்போரும், தலைவனுந் தலைவியுந் தம்முட் கேட்டனவற்றுக்குரியனவும், ஆராய்ந்து கொள்ளப்படும் 6மேற் கூறியவகையானென்பது; எனவே, தலைமகன் கூறப் பரத்தை கேட்டலும், தலைமகள் கூறப் பரத்தை கேட்டலும் முதலாயின 7புலனெறி வழக்கிற்கேலாதன விலக்கப்பட்டன ஒழிந்தனவற்றுட் சில வருமாறு:--
1. அவர்--அப்பதின்மரும். 2. தத்தங் கிளவி--தமதுதமது கிளவி. என்றது அவ்வவர்க்குரிய கிளவியை. 3. மேற் கூறுகின்றார் என்றிருத்தல்வேண்டும். நச்சினார்க்கினியம் நோக்குக. 4. மற்றுக் கூற்றுக்குரியரெனப்படுவார் அவ்வயின் தலைவனுந் தலைவியுங் கூறக் கேளாரோவெனின்? என்பது, மற்றுக் கூற்றுக்குரியார் கூறத் தலைவனுந் தலைவியுங் கேளாரோவெனின்? என்றிருத்தல்வேண்டும். என்னை? சூத்திரத்தால் தலைவனுந் தலைவியுங் கூறக் கேட்போரையே சொல்லப்பட்டதாதலானும், பின்வரும் விடை வினாவிற்குப் பொருத்தமின்றாதலானுமென்க. நச்சினார்க்கினியருரை நோக்குக. 5. தங்கிளவி--தமக்குரிய கிளவி. என்றது இருவர்க்கும் ஒவ்வொருவர்க்குமுரிய கிளவி என்றபடி. 6. மேற்கூறிய வகை--கற்பியலிற் கூறிய வகை. 7. புலனெறி வழக்கு--செய்யுள் வழக்கு. ஏலாதென்றமையான் ஏற்பன கொள்ளப்படும். |