பக்கம் எண் :

பொருளதிகாரம்591

[தலைமகளைச் சுட்டி வாயில்கள் ஒருவர்க்கொருவர்
கூறவும்பெறுவர் எனல்]

511.வாயி லுசாவே தம்முளு முரிய.

இதுவுமது.

இ--ள் : மேனின்ற அதிகாரத்தால் தலைமகளைச் சுட்டி ஒருவரொருவர்க்குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும், அவையுந் தலைமகள் கேட்பன என்றவாறு.

அதற்குச் செய்யுள்:

“தண்ணந் துறைவன் கொடுமை
 நம்மு னாணிக் 1காப்பா டும்மே.”

(குறுந். 9)

என்பது, பாடினி பாணர்க்குரைத்தது. ‘தம்முளும்’ என்ற உம்மை எதிர்மறையாகலான், 2கேட்குநள் அவளெனப்பட்டவாறன்றித் தம்முள் தாங்கேட்டல் சிறுபான்மையெனக் கொள்க.

(199)

[கூறாதன கூறுவனவாகவும் கேளாதன கேட்பனவாகவும்
கூறவும்படும் எனல்]

512.ஞாயிறு திங்க ளறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
யவையல பிறவு நுவலிய நெறியாற்
சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்.

இது, கேளாதன சிலபொருள் கேட்பனவாகப் பொருளியலுள் (196) வழுவமைக்கப்பட்டனவற்றை இலக்கணவகையாற் கூறுவனவுங் கேட்குநவும் ஆகற்கண்ணும் ஆய்கின்றானென்பது.

இ--ள் : ஞாயிறும் திங்களும் அறிவும் நாணும் கடலும் கானலும் விலங்கும் மரனும் பொழுதும் புள்ளும் நெஞ்சும் இன்னோரன்ன பிறவும் மேற் பொருளியலுள்,

“செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்.”

(196)

என்று பொதுவகையாற் கூறியவாற்றான் அவை தாம் சொல்லுவன போலவும் கேட்பனபோலவும் சொல்ல அமையும் என்றவாறு.


1. காப்பாடும்--காத்தல் செய்வேம். கரப்பாடும்மே எனவும் பாடம். கரத்தல்--மறைத்தல்.

2. கேட்குநர் அவர் எனவும் பாடம். அது சிறப்பின்று.