பக்கம் எண் :

592செய்யுளியல்

ஈண்டுக் கூற்றும் உடன் கூறினான் 1மேலிவற்றை வரையறுத்துக் கூற்றிற்கு உரியவென்றிலனாகலின். புலம்புறு பொழுதென்பது, மாலையும் யாமமும் எற்பாடுங் காருங் கூதிரும் பனியும் இளவேனிலும் போல்வன. ‘பிறவும்’ என்றதனால் புல் புதல் முதலியன கொள்க. அவற்றுட் சில வருமாறு:

“கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி
 னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
 தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத்
 துயிர்திரியா மாட்டிய தீ.”

(கலி. 142)

என்றாற்போல்வன கண்டுகொள்க.

(200)

[இடம் இதுவெனல்]

513.ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங்
கரும நிகழ்ச்சி யிடமென மொழிப.

இது, களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது.

இ--ள் : பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங் கரும நிகழ்ச்சியை இடமென்று கூறுப என்றவாறு.

இடமெனினுங் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுட் கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற்கு ஏதுவாகியதோர் உறுப்பினை இடமென்றானென்பது. ஒருநெறிப்படுதலென்பது, ஒருவழிப் பலவுந் தொகுதல். ஓரியலென்பது, அவற்றுக்கெல்லாம் இலக்கணமொன்றாதல்; அஃதாவது, காட்சியும் ஐயமும் துணிதலும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுமென் றின்னோரன்னவெல்லாம் ஒருநெறிப்பட்டு இயற்கைப் புணர்ச்சியென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கரும நிகழ்ச்சியென்பது, காமப்புணர்ச்சியென்னுஞ் செயப்படுபொருணிகழ்ச்சி; அஃது, இடமெனப் பட்டது. இது 2வினை செய்யிடம். 3நிலமாயின முன்னர்த் திணையெனப்பட்டன. காலம் முன்னர்ச் சொல்லும்.


1. இவற்றை என்றிலனாகலின் என இயைக்க. இவற்றை என்றது ஞாயிறு முதலியவற்றை.

2. வினை செய்யிடம்--தொழில் செய்யிடம்; என்றது புணர்ச்சியாகிய தொழில் நிகழுமிடம் என்றபடி.

3. நிலம்--இடமன்று என்றபடி. நிலமென்பது திணை. களம் என்பது வினைசெய்யிடம். ஆதலால் இது வேறு என்றபடி.