பசலை யுணீஇயர் வேண்டுந் 1திதலை யல்கு2லென் மாமைக் கவினே.” (குறு. 27) என வரும். உண்டியிற் குறைதலென்பது, பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டியூட்டியவழிப் பண்டுபோலாது, கழியவுஞ் சிறிதுண்டல்; அது, 3“தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கு நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ லென்னிதற் படலே.” (இ. வி. ப. 537) என வரும். உடம்புநனி சுருங்கலென்பது, அவ்வுண்மை உயிரிற்செல்லாது உடம்பிற் காட்டுதல்; அது, “தொடிநிலை நெகிழச் 4சாஅய்த் தோளவர் கொடுமை கூறிய வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழியென் நெஞ்சிற் பிரிந்தது மிலரே தங்குறை நோக்கங் கடிந்தது மிலரே.” (இ. வி. ப. 466) என வரும். கண்டுயின் மறுத்தலென்பது, இரவும் பகலுந் துஞ்சாமை; அது, “புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோர்யா னாகுவ தெவன்கொ னீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.” (அகம். 82) என வரும்.
1. திதலை--தேமல். 2. என் மாமைக் கவின் பசலையுணீயர் வேண்டும் என்பது பசலை பரத்தலைக் கருதிநின்றது. மாமை--மாந்தளிர்போலும் நிறம்: அது பசலையாலுண்ணப்படவேண்டும் என்று கூறினமையின் பசலை பரத்தலைக் கருதியதாயிற்று. 3. தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும் என்றமை உணவின் வெறுப்பைக்காட்டலின் உண்டியிற் குறைதல் பெறப்பட்டது. கைக்கும்--வெறுக்கும். 4. சாய்தல் என்பது உடம்பு நனி சுருங்கலைக் காட்டிற்று. |