கனவொடு மயங்கலென்பது, 1அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற் கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம். “அலந்தாங் கமையலே னென்றானைப் பற்றியென் னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்.” (கலி. 128) என்பது கனவொடு மயங்கிற்று. பொய்யாக்கோடலென்பது, மெய்யைப் பொய்யாக்கோடல்; அது, 2“கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெமக்குநின் மார்பு.” (கலி, 68) எனவும், “வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை.” (கலி. 41) எனவும், “வருது மென்ற நாளும் பொய்த்தன வரியே ருண்க ணீரு நில்லா.” (அகம். 144) எனவும் வரும். 3மெய்யேயென்றலென்பது, பொய்யை மெய்யென்று துணிதல்; அது, “கழங்கா டாயத் தன்றுநம் மருளிய பழங்க ணோட்டமு னலிய 4வழுங்கின னல்லனோ வயர்ந்ததன் மணனே. (அகம். 66)
1. அரிதினில் துயிலெய்தல்--அரிதாக உறங்கல். பொய்யுறக்கம். 2. கனவினெய்திய செல்வம் பொய்யாதல்போல நின்மார்பும் பொய்யாயிற்று என்பது மெய்யைப் பொய்யாகக் கோடல். அவன் மார்பை மெய்யாகப்பெற்றும் அரிதாதல் நோக்கிக் கனவின்கண் எய்திய செல்வமாயிற்றென்பது பொய்யாகக் கோடல். 3. மெய்யேயென்றல் என்பது தன் பொய்யான கருத்தை மெய்யென்று துணிதல். 4. அழுங்கல்--தவிர்தல். 5. அயர்ந்ததன்மணன்-செய்ததன்மணம்; என்றது பரத்தை மணத்தை. பழங்கண்ணோட்டம் என்றதனானும், நலிதர என்றதனானும் பொய்யே புகுந்தான் என்று கருதினாள் என்பது பெறப்படும். பழங்கணோட்டமும் என்பதும் பாடம். அதிலுள்ள உம்மை இழிவு சிறப்பு. |