பக்கம் எண் :

பொருளதிகாரம்63

ஆங்குநெஞ்சழிதலென்பது, அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்; எனவே, அறனளித்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்; அது,

“பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட
 கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை
 வழிபட் டிரக்குவேன் வந்தே னென்னெஞ்ச
 மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை
 யொழிய விடாதீமோ வென்று.”

(கலி. 143)

எனவும் வரும்.

எம்1மெய்யாயினு மொப்புமை கோடலென்பது, யாதானும் ஒருபொருள் கண்டவிடத்துத் தலைமகனோ டொப்புமை கோடல்; அது,

“கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப்
 பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப்
 பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே.”

(கலி. 20)

என, எம்மெய்யாயினும் ஒப்புமை கொண்டவாறு. ‘எம்மெய்யாயினும்’ என்றமையாற் கண்டபொருளும் கேட்டபொருளும் ஒப்புமைகொள்ளப்பெறுமென்றவாறு.

ஒப்புவழியுவத்தலென்பது, ஒப்புமையுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகைதோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று; என்னை? எம்மெய்யாயினுமென்றமையின்.

“காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின்
 றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே.”

(கலி. 80)

என்பது, ஒப்புவழியுவந்தது; என்னை? 2காமரு நோக்கினை யென்றமையின்.

3“பால்கொள லின்றிப் 4பகல்போன் முறைக்கொல்காக்
 கோல்செம்மை யொத்தி பெரும 5மற் றொவ்வாதி.”

(கலி. 86)

என வருவதூஉஞ் சொல்லுப.


1. மெய்--பொருள்.

2. காமருநோக்கு--விரும்பப்படும் அழகு. தந்தையேபோல்வான் மகனாதலின் காமருநோக்கென்றாள். பெரும என்றது மகனை. மகனைத் தந்தையொடு ஒப்புமைகண்டு உவத்தலின் ஒப்புவழியுவத்தலாயிற்று.

3. பால்கொளல்--ஒருபக்கஞ் சாய்தல்.

4. பகல்--நுகத்து நடுவாணி.

5. மற்று--கோலின் செம்மையல்லாத பிறகுணம்.