பக்கம் எண் :

64மெய்ப்பாட்டியல்

உறுபெயர் கேட்டலென்பது, தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்; அது,

“பலவின் பழத்துட்டங்கு மலைகெழு 1வெற்பனைப்
 பாடுகம் வா.”

(கலி. 41)

எனவும்,

“மென்றோ ணெகிழ்த்தான்2றிறமல்லால் யான்காணே
 னன்றுதீ தென்று பிற.”

(கலி. 142)

எனவும் வரும்.

கலக்கமென்பது, சொல்லத்தகாதன சொல்லுதல்; அது,

“பையெனக் 3காண்கு விழிப்பயான் பற்றிய
 கையுளே 4மாய்ந்தான் கரந்து.”

(கலி. 142)

எனவும்,

“பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப்
 புறங்காலிற் போக விறைப்பேன் முயலி
 னறம்புணை யாகலு முண்டு.”

(கலி. 144)

எனவும் வரும். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது, கலக்கமென்பதனை 5வேறு பெயர்த்து வைத்ததென்னையெனின், 6இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதனினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தன; அது,

“மாவென மடலு மூர்ப பூவெனக்
 குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
 மறுகி னார்க்கவும் படுப
 பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.”

(குறு. 17)

இதனுள் சாதல் எல்லையாகக் கூறியவாறு கண்டுகொள்க.


1. வெற்பனைப் பாடுகம்வா என்றது பெயர்கேட்டு மகிழ்தலைக் குறித்து நின்றது.

2. திறமென்றது--அவனழகு முதலியவற்றை, அதுவும் அவன் புகழ்குறித்து நின்றது.

3. காண்கு--காண்பேன்.

4. மாய்ந்தான்--மறைந்தான். கனவிலே கணவனைக் கையாற் பற்றிக்கொண்டவளாக் கண்டு பின் விழித்துப்பார்த்துக் காணாமையின் கலக்கமுற்றாள். கனவிற் காணப்பட்டுப் பின் மறைந்தான் என்றதும் முந்நீர் இறைப்பேன் என்றதுஞ் சொல்லத்தகாதன.

5. வேறு பெயர்த்து வைத்ததென்றது--முன்னையவற்றோடு ஒருங்குவைத்தெண்ணாமையை.

6. இக்காலத்து--களவுக்காலத்து.