இவ்வாறு கூறவே, இச்சூத்திரத்துளோதிய இருபது மெய்ப்பாடுந் தலைமகற்கும் ஏற்றவகையானே கொள்ளப்படுமென்பது; அது, 1“எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் 2யாரளோ நமக்கே.” (குறு. 19) என்பது, துன்பத்துப் புலம்பலாம்; என்னை? தானே துன்புறுகின்றானாகத் தலைமகன் உரைத்தமையின். “அந்தீங் கிளவி யாயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்க நெடுஞ்சே ணாரிடை 3விலங்கு ஞான்றே.” (அகம். 3) என்பது, எதிர்பெய்து பரிதல்; என்னை? 4முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லினமையின். ஒழிந்தனவுந் தலைமகற்குரியனவாகி வருவன வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாம் அறனும் பொருளுமன்றி இன்பப்பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவருள்ளத்து நிகழ்வனவாதல் 5வழக்கு நோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாயவற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டனவெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப்படுப்பனவாகலான் மெய்ப்பாடெனப்பட்டன. மேல்வருவனவற்றுக்கும் இஃது ஒக்கும். (22) [வரைவுக்கு நிமித்தமான மெய்ப்பாடுகள்] | 271. | முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்த லச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்த றூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே யழிவில் கூட்டம். |
1. எவ்வி--ஒரு வள்ளல். 2. யாரள்--எத்தன்மையள். 3. விலங்கல்--குறுக்கிட்டுத் தடுத்தல். 4. முற்காலத்துப் பாலைநிலத்தெதிர்ப்பட்டு வருந்தினமையைப் பின்னும் போக்குவலித்த நெஞ்சிற்குக் கூறினமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. 5. வழக்கு--உலகவழக்கு. |