பக்கம் எண் :

652மரபியல்

றன்மை இலவென்பது கொள்க; எனவே, 1செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் 2நேரவும்படுமென்பது.

(48)

[ஏற்றை என்னும் பெயர்க்குரியன இவை எனல்]

604.ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லா
மேற்றைக் கிளவி யுரித்தென மொழிப.

இ--ள் : ஏற்றையென்னுஞ் சொல் ஆற்றலொடு கூடிய ஆண்பாற்கெல்லாம் உரித்து என்றவாறு.

அவை,

“குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை.”

(நற். 36; குறுந். 141)

எனவும்,

“செந்நா யேற்றை கம்மென வீர்ப்ப.”

(அகம். 111)

எனவும்,

“கொடுந்தாண் முதலைக் கோள்வ லேற்றை.”

(குறு. 324)

எனவும் வரும்.

இக்கருத்தினானே,

“பிணர்மோட்டு நந்தின் பேழ்வா யேற்றை.”

(அகம். 246)

எனவும்,

“புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை.”

(அகம். 133)

எனவும் கூறினார்.

அவையும் அப்பெயரானே வழங்குதல் ஆற்றலுடையவாகத் தோன்றும். ‘எல்லாம்’ என்றதனால், சிறுபான்மை ஆற்றல் இல்லாதனவுங் கொள்க; அது,

“இடுகாட்டு ளேற்றைப் பனை.”

(நாலடி. 96)

என்பதுபோன்று வருவன; பிறவும் அன்ன.

(49)


1. “எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவன்மேலேறி” என்பர் கந்தபுராணகாரர். (தெய்வயானையம்மை திருமணப்படலம் 112)

2. நேர்தல்--பொருந்தல்.