பக்கம் எண் :

பொருளதிகாரம்653

[ஆண் பெண் என்னும் பெயர்கள்
இவ்விவற்றிற்குரியவெனல்]

605.ஆண்பா லெல்லா மாணெனற் குரிய
பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய
காண்ப வவையவை யப்பா லான.

இது, மேற்கூறிய ஆண்பாற் பெயர்க்கும், இனிவரும் பெண்பாற் பெயர்க்கும் புறனடை.

இ--ள் : ஆணெனுஞ் சொல் எல்லாச் சாதியுள் ஆண்பாற்கும் உரித்து; பெண்ணென்னுஞ் சொல் எல்லாச் சாதியுட் பெண்பாற்கும் உரித்து; வழக்கினுள் அவ்வாறு காணப்படும் அவை என்றவாறு.

அவை ஆண்யானை, பெண்யானை; ஆண்குரங்கு, பெண்குரங்கு; ஆண்குருவி, பெண்குருவி என்றாற்போல்வன. இவை காணப்படும் எனவே, இத்துணை விளங்கவாராது சிறுவரவினான் வருவனவுமுள இருபாலு மல்லாதன வென்பது. 1ஆணலி பெண்ணலி எனவும், ஆண்பனை பெண்பனை எனவும் வரும்; பிறவும் அன்ன.

(50)

[மேற்கூறிய பெண்பாற் பெயர்களுள்
பிடியென்னும் பெயர் இதற்குரியது எனல்]

606.பிடியென் பெண்பெயர் யானை மேற்றே.

இது, முறையானே மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற பெண்மைப்பெயர் கூறிய தொடங்கி ஆண்பாலிற் களிறு முற் கூறியவாறுபோலப் பிடியினை முற்கூறியது.

இ--ள் : பிடியென்னும் பெயர் யானைக்கண்ணது என்றவாறு.

“பிடிபடி முருக்கிய பெருமரப் பூசல்.”

(அகம். 8)

எனவரும். ‘பெயர்’ என்றதென்னையெனின்,--அவை தொடங்குகின்றதென்பது அறிவித்தற்கென்பது.

(51)


1. ஆணலி--ஆண்மை திரிந்து அலியானது. பெண்ணலி--பெண்மை திரிந்து அலியானது. ஆணலி, பெண்ணலி என்பன இக்காலத்தும் உலகவழக்கிலுள்ளன. ஆண்பனை--காயாப்பனை. பெண்பனை--காய்க்கும்பனை.