“மனைவா ழளகின் வாட்டொடு பெறுகுவிர்.” (பெரும்பாண். 256) என்பது கோழி; பிறவும் அன்ன. (56) [பிணையென்னும் பெயர் இவைக்குரியது எனல்] | 612. | புல்வாய் நவ்வி யுழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே. |
இ--ள் : பிணையென்னும் பெண்பெயர்க்குரியன இவை நான்கும் என்றவாறு. “அலங்கல் வான்கழை யுதிர்நென் னோக்கிக் கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண்.” (அகம். 129) எனவும், “சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை.” (புறம். 2) எனவும், “சிறுதலை நவ்விப் பிணையிற் றீர்ந்த நெறிகோட் டிரலை மான். (குறுந். 183) எனவும், “கவரி மான்பிணை நரந்தங் கனவும்.” (பதிற். 11) எனவும் வரும். “சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே.” என்பது, பிணையென்னுஞ் சொற்பொருளினை உண்மை நோக்கிற் பிரியாது 1பிணையும் பிற சாதிக்குஞ் 2சேவற்குஞ் செல்லுமாயினும், மரபுநோக்கப் பிணையென்றற்குச் சிறப்புடையன இவையென்றவாறு. (57) [பிணவென்னும் பெயர் இவைக்குரியதெனல்] | 613. | பன்றி புல்வாய் நாயென மூன்று மொன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை. |
1. பிணையும் என்பது பிணைகின்ற என்னும் பொருள்பட நின்றது. பிணைதல்--சேர்தல். அஃதாவது, ஆணும் பெண்ணுமாகப் பிரியாது கூடித்திரிதல். 2. சேவல் என்பது ஈண்டு வருதல் பொருத்தமாய்க் காணவில்லை. ஆண்பறவை பெண்பறவையோடு கூடித்திரிதலின் அவ்வாறு கூறினாரெனினுமாம். |