பக்கம் எண் :

656மரபியல்

இ--ள் : இவை மூன்றுசாதியும் பிணவென்னும் பெயர்க்குரியன என்றவாறு.

“நெடுந்தாட் செந்தினைக் கெழுந்த கேழல்
 குறுந்தாட் பிணவொடு குறுகல் செல்லாது.”

எனவும்,

“குறியிறைக் குரம்பைக் குறத்தி யோம்பிய
 மடநடைப் பிணவொடு கவர்கோட் டிரலை.”

எனவும்,

“நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை.”

எனவும்,

“மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கட்
 செந்நா யேற்றை கேழ றாக்க.”

(அகம். 21)

எனவும் வரும்.

‘ஒன்றிய’ என்றதனான்,

“ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய.”

(அகம். 72)

எனப் புலிக்குங் கொள்க; பிறவும் அன்ன.

(58)

[பிணவல் என்னும் பெயரும் அவற்றிற்குரியதெனல்]

614. பிணவ லெனினு மவற்றின் மேற்றே.

இ--ள் : பிணவலென்பதூஉம் அம்மூன்றற்கும் உரித்து என்றவாறு.

“இரியற் பிணவ றீண்டலின்”

(அகம். 21)

என்பது, பன்றி.

“நான்முலைப் பிணவல் சொலியக்கா னொழிந்து.”

(அகம். 248)

என்பதும் அது; ஒழிந்தனவும் அன்ன.

(59)

[ஆ என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்]

615. பெற்றமு மெருமையு மரையு மாவே.

இது, மேல் அந்தஞ்சான்ற (558) என்னும் இலேசினானே ஆவென்பது தழீஇக்கொண்டமையின் அஃது 1இன்னுழியாகாது என்கின்றது.


1. இன்னுழியல்லதாகாதென்றிருத்தல்வேண்டும். அன்றேல் ஆகும் என்றிருத்தல்வேண்டும்.