[மந்தி என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்] | 622. | குரங்கு முசுவு மூகமு மந்தி. |
இ--ள் : இம் மூன்றுசாதிப் பெண்பாலும் மந்தியென்னும் பெயர்பெறும் என்றவாறு. “கைம்மை யுய்யாக் காமர் மந்தி.” (குறுந். 69) எனவும், 1“கருமுக மந்தி செம்பி னேற்றை.” எனவும் வரும். ஊகத்துக்கும் இஃதொக்கும். (67) [மரீஇவந்த மரபுப்பெயர்கள் இவை எனல்] | 623. | குரங்கி னேற்றினைக் கடுவ னென்றலு மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலுஞ் செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் குதிரையு ளாணினைச் சேவ லென்றலு மிருணிறப் பன்றியை யேன மென்றலு மெருமையு ளாணினைக் கண்டி யென்றலு முடிய வந்த வவ்வழக் குண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. |
இது, மரீஇவந்து முடிந்த மரபுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : ஆண்குரங்கினைக் கடுவனென்றலும், மரப்பொதும்பினுள் வாழுங் கூகையைக் கோட்டானென்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தையென்றலும், வெருகினைப் பூசையென்றலும், ஆண்குதிரையைச் சேவலென்றலும், இருணிறப்பன்றியை ஏனமென்றலும், எருமையேற்றினைக் கண்டியென்றலும், அவ்வாறு முடிந்த வழக்குண்மையிற் கடியப்படா கடப்பாடு அறிந்தோர்க்கு என்றவாறு.
1. கருமுகமந்தி, செம்பினேற்றை என்பன இடக்கரடக்கலுக்கு, தொல். சொல். சேனாவரையருரை முதலியவற்றில் உதாரணமாக வருகின்றன. அதுநோக்கிக் ‘கருமுகமந்தி’ என்பதனோடு செம்பினேற்றை என்பதை யாரும் இடைச் செருகினார்களோ அல்லது இரண்டுஞ்சேர்ந்து ஒருசெய்யுளடியோ என்பது ஆராயத்தக்கது. |