“கடுவனு மறியுமக் கொடியோ னையே,” (குறுந். 26) ஆண்குரங்கு. இதனைக் கடியலாகாது எனப்பட்ட இழுக்கென்னையெனின்,--மக்கட்கும் 1வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றனபோலுமாதலின். கூகையைக் கோட்டானென்றலும் வழக்காகலான் அமையும்; ‘மரம்பயில் கூகை’ யென்ற தென்னையெனின்,--மரக்கோடு விடாமையிற் கோட்டானென்னும் பெயர் பெற்றதென்றற்கு. தத்தையென்பது பெருங்கிளியாதலிற் சிறுகிளிக்கும் அப்பெயர் கொடுத்தலமையுமென்றவாறு. ‘செவ்வாய்க் கிளி’ என்பதனை, சிறுகிளிமேற் கொள்க. ‘வெவ்வாய் வெருகு’ என்றதனால்’ ‘படப்பை வேலியும் புதலும் பற்றி, 2விடக்கிற்கு வேற்றுயிர் கொள்ளும் வெருகினை, இல்லுறைபூசை’யின் பெயர்கொடுத்துச் சொல்லலும் (புறம். 117-326) அமையுமென்றவாறு. 3குதிரையைச் சேவலென்றல் இக்காலத்தரிதாயிற்று. அதுவுஞ் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பதுபோலச் சொல்லுதல் அமையுமென்பது கருத்து. எருமையேற்றினையுங் கண்டியென்பபோலும்; அது காணலாயிற்றில்லை; அதனை, இலக்கணைவகையானுடைய பெயரென்றலுமாம்; இது பொழுதின்றென்பது. ‘கடனறிந்தோர்’ என்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகாதென்றவாறு. இன்னும் 4இப்பரிகாரத்தாலே கோழியை வாரணமென்றலும், வெருகினை விடையென்றலும் போல்வன பலவுங் கொள்க. அவை,
1. இக்காலத்தும் ஆண்பூனைக்குக் கடுவன் என்ற வழக்குண்டு. 2. விடக்கு--இறைச்சி. 3. குதிரையைச் சேவல் என்றது பறவைச் சேவல்போல விரைந்து செல்வதுபற்றி. “புள்ளியற் கலிமாவுடைமையான” என்பது நோக்குக. “புள்ளியன்மான்றேர்” (சிலப். கானல்வரி. 30) என்பதுமது. 4. பரிகாரம்--பாதுகாப்பு. இச்சொல் சேனாவரையராலும் ஆளப்படும். |