பக்கம் எண் :

பொருளதிகாரம்661

“கான வாரண மீனுங்
 காடாகி விளியு நாடுடை யோரே.”

(புறம். 52)

எனவும்,

“வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ.”

(முருகு. 219)

எனவும்,

“வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலை.”

(புறம். 324)

எனவும் வரும்.

(68)

[இவையும் மரீஇவந்த மரபுப்பெயர் எனல்]

624. பெண்ணு மாணும் பிள்ளையு மவையே.

இதுவுமது. பெண் ஆணென்பன இருதிணைப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன முற்கூறினான்; மேல் ஒன்றற்குரியபெயர் மரீஇவந்து பிறிதொன்றற்காயவழியுங் கடியலாகாதென நின்ற அதிகாரத்தான் இவையும் அவ்வாறே திரியினுங் கடியலாகாதென்றவாறு.

இ--ள் : 1பெண்ணும் ஆணும் பிள்ளையுமென வாளாது சொல்லியவழி உயர்திணைக்கேற்றன மரீஇவந்த மரபு என்றவாறு.

மக, குழவியென்பனவோவெனின்,--அவை அத்துணைப் பயின்றில உயர்திணைக்கென்பது; எடுத்தோதிய மூன்றும்2ஆயின. வாளாதே ‘பெண் வந்தது’ என்றவழி, அஃறிணைப் பொருளென்பது உணரலாகாது; ‘பெண்குரங்கு வந்தது’ என விதந்தே கூறல்வேண்டுமென்பது. ‘பெண் பிறந்தது’, ‘ஆண் பிறந்தது’, ‘பிள்ளை பிறந்தது’ என அடையடாது சொல்லியவழி உயர்திணைக்கேயாம். அஃறிணைக்காயின் அற்றன்றென்பது.

(69)

[அந்தணர்க்குரியன இவை எனல்]

625. நூலே கரக முக்கோன் மணையே
யாயுங் காலை யந்தணர்க் குரிய.

1. பெண்பிறந்தது ஆண்பிறந்தது பிள்ளைபிறந்தது என அடையடாது சொல்லின் உயர்திணைக்கேயாம். அடையடுப்பின் அஃறிணைக்காம் என்றபடி. எனவே அஃறிணைக்குத் திரிந்து வந்தது என்பது கருத்து.

2. ஆயின் என்று கொண்டு சிலசொற் றவறியதாகக் கொள்வது நலம்.