பக்கம் எண் :

பொருளதிகாரம்667

இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க்கும் ஒப்பச் செல்லுமென்பது கருத்து; எற்றுக்கு? இவை சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின். ஊரும் பெயருமென்பன:--உறையூர்ஏணிச்சேரிமுடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூ ருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன. உறையூர்ச் சோழன், மதுரைப் பாண்டியன் என்பன அரசர்க்குரியன; காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க்குரியன; அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன.

இனி, ‘உடைத்தொழிற் கருவி’ என்பன:-- அந்தணாளர்க்குச் 1சுருவையும் 2சமிதை குறைக்குங் கருவியும் முதலாயின; 3அரசர்க்கு, குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின. வணிகர்க்கு, 4நாவாயும் 5மணியும் 6மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு, 7நாஞ்சிலுஞ் 8சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. அவையெல்லாம் அவரவர் செய்யுட்குரியவென்பது. (74)

[தலைமைக் குணச்சொல்லும் நான்கு வருணத்தாரும்
பெறுவர் எனல்]

630.தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரிய
நிலைமைக் கேற்ப நிகழ்த்துக வென்ப.

இதுவும் அது.

இ--ள் : அந்நான்கு சாதியார் தலைமைக்குணம்படச் சொல்லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கேற்ப நிகழ்த்தவும் படும் என்றவாறு.


1. சுருவை--நெய்ம்முகந்து ஓமஞ்செய்யுங் கருவி.

2. சமிதை--ஓமவிறகு.

3. இவை பவானந்தம்பிள்ளை பதிப்பி லில்லை.

4. நாவாய்--தோணி.

5. மணி--இரத்தினங்கள்.

6. மருந்து--மருந்துப் பொருள்கள்.

7. நாஞ்சில்--உழுங் கலப்பை.

8. சகடம்--பண்டி (வண்டி).