பக்கம் எண் :

668மரபியல்

அந்தணர் தலைமைக்குணங் கூறுங்காற் பிரமனொடு கூறியும், அரசரை மாயனொடு கூறியும், வணிகரை 1நிதியின் கிழவனொடு கூறியும், வேளாண்மாந்தரை வருணனொடு கூறியுந் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். அவையெல்லாம் அவரவர் செய்யுளுட் கண்டுகொள்க.

(75)

[அரசரும் வணிகரும் படைவகையும் பெறுவர் எனல்]

631. இடையிரு வகையோ ரல்லது நாடிற்
படைவகை பெறாஅ ரென்மனார் புலவர்.

மேல் நான்கு வருணத்தாரையும் உடன் கூறிவந்தான், இது முதலும் கடையும் ஒழித்து இடைநின்ற இரு வருணத்தார்க்கும் ஆவதோர் புறனடை கூறுகின்றது.

இ--ள் : அரசரும் வணிகருமல்லது படைப்பகுதி பெறார் என்றவாறு.

படைப்பகுதியென்பன: வேலும் வாளும் வில்லும் முதலாயின. ‘நாடின்’ என்பதனான், ஒருசாரந்தணரும் படைக்குரியாரென்பது கொள்க; அவர், 2இயமதங்கியாரும் 3துரோணனும் கிருபனும் முதலாயினாரெனக் கொள்க. வேளாண்மாந்தர்க்கும் இஃதொக்கும் இவை விகாரமெனவும் எடுத்தோதிய வருணங்கட்கே இஃது இயல்பெனவுங் கொள்க.

(76)

[வணிகர்க்கு வாணிகமுரித்தெனல்]

632. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

இது, வணிகர் மரபு கூறுகின்றது.

இ--ள் : வணிகர்க்குத் தொழிலாகிய வாணிக வாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள்செய்தல் பெரும்பான்மையுமாம் என்றவாறு.

அவையும் அவர் செய்யுளிற் காணப்படுமாறு அறிந்து கொள்க.

(77)


1. நிதியின் கிழவன்--குபேரன்.

2. இயமதங்கி--பரசுராமன் தந்தை. இராமாயணத்தும் பாரதத்தும் இவன் படைக்குரியனாதல் கூறப்பட்டுளது காண்க.

3. துரோணனும் கிருபனும்--படைத்தொழிற் பகுதிக்குரியராதலைப் பாரதத்துட் காண்க.