[வணிகர் எண்வகைக் கூலமும் பெறுவர் எனல்] | 633. | மெய்தெரி வகையி னெண்வகை யுணவின் செய்தியும் வரையா ரப்பா லான. |
இன்னும் வணிகர்க்கே உரிய தொழில் கூறுகின்றது. இ--ள் : பொருள் தெரிந்தவகையான் எண்வகைக்1கூலமுஞ் செய்து விளைத்தலும் அவர் கடன் என்றவாறு. அவையும் அவர் பண்டத்தொடு உபகாரப்படுமாகலின் வரையப்படாதென்றானென்பது. எண்வகையுணவென்பன: பயறும் உழுந்தும் கடுகும் கடலையும் எள்ளும் கொள்ளும் அவரையும் துவரையுமாம். (78) [அவர் கண்ணியும் தாரும் பெறுவர் எனல்] | 634. | கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே. |
இதுவும் அது. இ--ள் : இவையும் வணிகர் திறத்தன என்றவாறு. கண்ணியென்பது, சூடும்பூ. தாரென்பது ஒருகுடிப் பிறந்தார்க்குரித்தென வரையறுக்கப்படுவ 2தாயிற்று. எண்ணப்படு மெனவே 3அவரவர்க்குரியவாற் றாற் பலவாகி வரும்; அவை வந்தவழிக் கண்டுகொள்க. (79) [வேளாளர்க்கு உழவுதொழில் உரித்தெனல்] | 635. | வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. |
இது, வேளாண்மாந்தர்க்குக் கூறப்படுந் தொழில் கூறுகின்றது. இ--ள் : வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதன் மரபு என்றவாறு.
1. கூலம்--பண்டம். 2. ஆயிற்று--ஈண்டு வேண்டியதில்லை. 3. அவரவர்க்கு உரிய என்றது--அவ்வக் குடிப்பிறந்தார்க்கு உரிய என்றபடி. குடி--இப்பர்குடி, கவிப்பர்குடி பெருங்குடி என்பன. |