பக்கம் எண் :

670மரபியல்

‘உழுதுண்டு வாழ்வார்’ (குறள். 1033) என்பது, இதன் பொருளாயிற்று. மற்றுப் 1பார்ப்பியன் முதலாகிய நால்வகைத் தொழிலும் வாகையுட் (75) கூறினமையின் இச்சூத்திரமும் மேலைச்சூத்திரங்களும் மிகையாம் பிறவெனின்,--அற்றன்று; பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத்தொழிலும் நிரை காத்தலும் வாணிகமுமென்பன அவற்றின் ஒத்த சிறப்பினவன்றி அவற்றுள்ளும் ஒரோவொன்று ஒரோவருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினானென்பது. நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல்போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறுவரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குஞ் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தொடுபட்டதே பெருவரவிற்றெனவுங் கூறினான் இச்சூத்திரங்களானென்பது. இதனது பயம்: புலனெறி வழக்கினுள் இவர்க்கு இவை சிறந்த மரபென்றலாயிற்று.

(80)

[வேளாளர் வேந்தர் கொடுப்பின்
படையுங் கண்ணியும் பெறுவரெனல்]

636. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே.

இது, நான்காம் வருணத்தார்க்கோர் புறனடை.

இ--ள் : வேந்தர் கொடுப்பின் வேளாண் மாந்தர்க்குப் படைக்கலமும் கண்ணியும் பெறும்பொருளாகச் சொல்லப்படும் என்றவாறு.

‘வேந்துவிடு தொழில்’ என்பது, வேந்தனாற் கொடுக்கப்படுந் 2தண்டத் தலைமையாகிய சிறப்புக் காரணத்தானென்றவாறு; அகத்திணையியலுள்,

“உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான.”

(31)

என்புழிக் கூறப்பட்டதெனின்,--வேளாளரையொழித்து ஒழிந்தோரை நோக்கிற்று அச்சூத்திரமென்பது. மேற்கூறியவற்றை


1. பார்ப்பியல்--பார்ப்பனச் சாதியின் தொழில்.

2. தண்டம்--சேனை.