பக்கம் எண் :

பொருளதிகாரம்673

“நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற்
 புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை.”

(அகம். 200)

எனப் புறக்காழும் அகக்காழும் அல்லன புல்லெனப்பட்டன வென்பது; 1அது, பனையோலையுமாகலிற் புறக்காழுடைய பனையுமா மென்பது. 2ஒதி மரக்கிளவியுமாமென்பது சிறுபான்மை. பிறவும் அன்ன.

(85)

[புல்லினுறுப்புகளை வழங்கும் வாய்பாடு இவை எனல்]

641. தோடே மடலே யோலை யென்றா
வேடே யிதழே பாளை யென்றா
வீர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

இது, முறையானே புறக்காழனவற்றைச் சொன்மரபுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : எண்ணப்பட்ட வாய்பாடும் பிறவும் புல்லுறுப்பினைச் சொல்லும் வாய்பாடு என்றவாறு.

‘பிறவும்’ என்றதனால், குரும்பை நுங்கு 3நுகும்பு போந்தை யென்றற்றொடக்கத்தனவுங் கொள்க.

“இரும்பனை வெண்டோடு மிலைந்தோனு மல்லன்.”

(புறம். 45)

எனவும்,

“மாவென மடலு மூர்ப.”

(குறுந். 17)

எனவும்,

“துகடபு காட்சி யவையத்தா ரோலை.”

(கலி. 94)

எனவும் வரும். ஒழிந்தனவுங் கொள்க.


1. அது என்றது ‘புல்வேய் குரம்பை’ என்பதிற் புல் என்பதை. புல் என்பதற்கு. குரம்பை பனையோலையானும் வேய்தலின் பனை என்றுங் கூறலாம் என்றபடி. புல் என்பது புற்சாதிக்கும் பெயர். அது: “நெல்லும் புல்லும் வரையா ராண்டே” என்பதனாலறிக, புறக்காழுடையவற்றிற்கும் பெயர்.

2. ஒதி--உதி. அது அகக்காழும் புறக்காழு மல்லாதது. அதனை மரமென்றல் சிறுபான்மை என்றபடி. ‘உதிமரக் கிளவி’ (தொ. எழு. உயிர். 41)

3. நுகும்பு--சுருண்ட குருத்து என்பர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். (குறுந்தொகை உரை-308). இளமடல் என்பர் நற்றிணை உரையாசிரியர். (நற்றிணை--92).