“வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க.” (நெடுநல். 22) என்பதும் அது. ‘நேர்ந்தன பிறவும்’ என்பது, கேட்டாரை உடம்படுவிப்பன பிறவுமென்றவாறு. “வண்கோட் பெண்ணை வளர்ந்த நுங்கின்.” (சிறுபாண். 27) எனவும், “பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொடு.” (புறம். 249) எனவும் வரும். பிறவும் அன்ன. (86) [மரவுறுப்புக்களை வழங்கும் வாய்பாடு இவை எனல்] | 642. | இலையே தளிரே முறியே தோடே சினையே குழையே பூவே யரும்பே நனையுள் ளுறுத்த வனையவை யெல்லா மரனொடு வரூஉங் கிளவி யென்ப. |
இஃது, அகக்காழனவற்றுறுப்பினைச் சொல்லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : எண்ணப்பட்டனவும் பிறவுமெல்லாம் மரத்துறுப்பினைச் சொல்லும் வாய்பாடு என்றவாறு. ‘அனையவையெல்லாம்’ என்ற புறநடையானே, 1புல்லுந்தழையும் பொங்கரும் முதலாயின கொள்க. அவை, “தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇ.” (பெரும்பாண். 104) எனவும், “முறிமே யாக்கை.” (நற். 151; மலைபடு. 313) எனவும், “யாஅ வொண்டளி ரரக்குவிதிர்த் தன்ன.” (அகம். 333) எனவும், “தோடுதோய் மலிர்நிரை யாடி யோரே.” (அகம் 166) எனவும், “மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை.” (குறுந். 26) எனவும்,
1. புல்--புற்சாதியினிலையைப் புல் என்றல் வழக்கு. மரங்களுக்குக் காணப்படவில்லை. |