“கொய்குழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர.” (கலி. 74) எனவும், “நனைத்த செருந்தி.” (அகம். 150) எனவும், “அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல.” (அகம். 59) என்றாற்போல வருவனவுமெல்லாங் கொள்க. மேலைச் சூத்திரத்து, “புல்லொடு வருமெனச் சொல்லினர்.” (641) எனவும், இச்சூத்திரத்து, “மரனொடு வரூஉங் கிளவி.” (642) எனவும் மிகைபடக் கூறியதென்னையெனின்,--அம்மிகையானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றொடு தழீஇக் கொள்ளப்படுவனவுமெல்லாம் இவற்றுக்குரியவென்பது கொள்க. அவை, ஊகம்புல்லும் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும், 1புழற்கால் ஆம்பல் முதலியனவும், புல்லெனப்பட்டடங்கி 2யவற்றின் பெயரும் பெறுமென்பது. பிடாவும், காயா முதலிய புதலும், பிரம்பு முதலாகிய கொடியும் மரமெனப் பட்டவற்று உறுப்பின் பெயர்பெறுமென்பது; அவை, ஊகந்தோடு சீழகந்தோடு எனவும், பிடவிலை காயாம்பூ முல்லைப்பூ எனவும் வரும். பிறவும் அன்ன. மற்றுப் பிறப்புமுறையால் தளிர் முற்கூறாது இலை முற் கூறியதென்னையெனின்,--புல்லினுள் ஒருசாரன இலையெனவும், பூவெனவும்படுமென 3அதிகாரங் கோடற்கென்க. அவை, “ஈய்த்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை.” (பெரும்பாண். 88) எனவும், ‘ஆம்பலிலை, தாமரையிலை.’ எனவும், ‘ஆம்பற்பூ, தாமரைப்பூ.’ எனவும் வரும். பிறவும் அன்ன கொள்க.
1. புழற்கால்-துளையுடைய தண்டு. 2. அவற்றின் பெயர் எனப் பிரிக்க. 3. முதற் சூத்திரத்து வந்த புல்லை இதற்கும் அதிகாரத்தாற் கோடற்கு என்றபடி. |