சொல்லுப. அவை இத்துணையென்று வரையறுக்கலாகா; என்னை? 1’ஒற்றை, 2இரட்டை,3புத்தி, 4வித்தாரம்’ என்றாற்போல்வன பலவுங் கட்டிக்கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின் அவற்றிற்கு வரையறைவகையான் இலக்கணங் கூறலாகாவென்பது. 5“ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னைம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையால்.” எனவும், “கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை 6யாடா வடகினுளுங் காணேன்.” (திணைமாலை நூற். 4) எனவும் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறையின்மையின் அவற்றுக்கு இலக்கணங் கூறார் பண்ணத்திப் பாற் (492) படுப்பினல்லதென்பது. (90) [மரபுநிலை திரியிற் பொருள் வேறுபடுமெனல்] | 646. | மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும். |
இது, மேற்போன வழக்கிற்கும் செய்யுட்கும் வருகின்ற இலக்கணத்திற்கும் பொது. இ--ள் : மரபினை நிலைதிரித்துச் சொல்லுபவெனின்,--உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிதுபிறிதாகும் என்றவாறு. செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாய பொருளுணர்வதெல்லாம் மரபுபற்றாக அல்லது மற்றில்லையென்றவாறு. (91) [வழக்காவது இதுவெனல்] | 647. | வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான. |
1. ஒற்றை--தனிநின்று முடிவது. 2. இரட்டை--ஒருவினை கொண்டு முடியும் இரு செய்யுள். 3. புத்தி--நுட்பபுத்தியினாற் செய்வது போலும். 4. வித்தாரம்--அகலக் கவி. ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்பன பேராசிரியர் பிறரைப் பழித்துக் கட்டியது. 5. ஐயைதன்கை எட்டு. அதனுள் இரண்டொழிக்க ஆறாம். ஆறு என்றது அறுமீனை=கார்த்திகையை. கார்த்திகை--கார்த்திகைப்பூ. என்றது காந்தட்பூவை. 6. அடாவடகு--விளையாட்டு. ஈண்டு ஆயத்தைக் குறித்ததுபோலும். திணைமாலை நூற்றைம்பதின் உரை நோக்குக. உரைகாரர் ஆடாவடகு நீட்டல் விகாரமென்பர். |