பக்கம் எண் :

பொருளதிகாரம்681

முன்னை வழிநூலே முதனூலெனப்படுமென்றற்கென்பது. இதனைச் சார்புநூலென்னாமோவெனின்.--1வழிநூலுஞ் சார்புநூலுமாகலின் அங்ஙனங் கூறானாயினான். எற்றுக்கு? சார்பு நூலினைப் பற்றி ஒருநூல் பிறந்தவழிச் சார்பின் சார்பெனக் கூறல்வேண்டுவதாகலானும் அதனைச்சார்ந்து தோன்றிற் சார்பென்னுஞ் சொல்லை மும்முறை சொல்லியும் அதன்பின் தோன்றிய நூற்கு நான்முறை சொல்லியும் எண்ணிகந்தோடுதலானுமென்பது.

மற்று இரண்டாமெண்ணு முறைமைக்கணின்ற நூலினையே வழிநூலெனக் கொண்டு மூன்றாவது தோன்றிய நூலே சார்பு நூலாகவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறாரெனவுங் கொள்ளாமோவெனின்,--முதனூலிற் கிடந்த பொருளை 2ஓர் உபகாரப்பட, வழிநூல் செய்த ஆசிரியன் செய்தக்காற், சார்பு நூலெனப் பின்னர் ஓர் ஆசிரியன் நூல்செய்ததனாற் பயந்த தென்னையென்க. என்றார்க்கு, வழிநூலும் பிற்காலத்தரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்தலன்றே இதனாற் பயந்ததெனின்,--அதுதானும் பின்னொருகாலத்து 3அரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்வானல்லனோவென்று மறுக்க. இவ்வாராய்ச்சி வேண்டாவென்றற்கன்றே இவ்விருவகையானும் வருதலே மரபென்பானாயிற்றென் றொழிக.

ஒன்றன்வழியே யன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானும் நூல் செய்யப்பெறாரோவெனின்,--அது மரபன்று; அதுநோக்கியன்றே,

“மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்.”

(646)

என்றவிதி நூலிற்கும் எய்துவித்துப் புகுந்ததென்பது; என்னை? பிறிதுபிறிதாகுமாறெனின்,--ஒருபொருட்கண்ணே மாறுபட்ட இலக்கணங் கூறின் 4அவ்விரண்டும் அதற்கிலக்கணமாகாது; என்போல? மாணிக்கமணியினைச் செவ்வண்ணம் முதலாயின சில இலக்கணங் கூறிய நூல் கிடப்பக் கருவண்ண முதலாயின


1. வழிநூலுஞ் சார்புநூலு மாகலின்--மூன்றாவது நூல். வழிநூலும் சார்புநூலும் எனப்படுமாகலின் என்பது கருத்து. எனவே இரண்டுமெனப்படும். ஆதலின் அங்ஙனம் கூறார் என்க.

2. உபகாரப்படச் செய்தக்கால் என இயைக்க.

3. அரிது--உணர அரியது.

4. அவ்விரண்டும்--மாறுபட்ட இலக்கணம் இரண்டும்.