மென்பது; என்னை? 1‘குற்றங் கெடுத்து முற்ற உணர்ந்தோரும்’, கெடுப்பதோர் 2குற்றமின்றி முழுதுணர்ந்தோரும், எல்லாம் பிறர்க்குறுதியாகிய ஆகமஞ் செய்யினுந் துறக்கம் முதலாகிய பயன்றுய்ப்பாரல்லராகலின். இனி முனைவனாற் செய்யப்படுவதோர் நூலில்லையென்பார், அவன்வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள்கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம் முனைவன் முன்னர் 3ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் 4அவற்றவற்றிற்கு நூல்செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்புநூலுமெனப் பலவுஞ் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா; அல்லதூஉம், அவை தமிழ்நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியிலவென்பது. மற்று, மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமாமெனவே, எல்லார்க்கும் முதல்வனாயினான் செய்தது முதனூலேயாமென்பது பெறுதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின்,--தாமே தலைவராவாரும் அத்தலைவரை வழிப்பட்டுத் தலைவராயினாரும் பலராகலின் தாமே தலைவராயினார் நூல்செய்யின் முதனூலாவதெனின்,--அற்றன்று; தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலராகலின் தலைவர்வழி நின்று தலைவனாகிய அகத்தியனாற் செய்யப்பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் 5பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென்பது அறிவித்தற்கும், அங்ஙனம் ‘வினையினீங்கி விளங்கிய 6அறிவினான் முதனூல் செய்தான்’ என்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது.
1. குற்றங்கெடுத்து என்றது--போகமும் பாவமும் நீங்கலின், குற்றம் அவர்க்கு இல்லை என்றபடி. 2. குற்றமின்றி முழுதுணர்ந்தோர்--இறைவன் கூறானோர். 3. ஆகமம்--நூல். 4. அவற்றவற்றிற்கு--அவ்வப் பொருளுக்கு. 5. பெருமானடிகள்--இறையனார். 6. அறிவினான்--அறிவினையுடையான். |