பக்கம் எண் :

பொருளதிகாரம்685

எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம்.

என்றார்க்கு முந்துநூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தனவெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் அவற்றுவழி நூல் செய்தாரென்றக்கால் இழுக்கென்னையெனின்,--அது வேத வழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்தகாலத்துப் பிற 1பாசாண்டிகளும் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் ‘இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம்’ என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு, உரையெழுதினோரும் அது கூறிக் 2கரிபோக்கினாராகலானும்,3அவர் 4பலவுத்துறந்த நோன்புடையாராகலாற் பொய் கூறாராகலானுமென்பது. இங்ஙனங் கூறாக்கால் இதுவும் மரபு வழுவென்று அஞ்சி அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளும் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவென்பது; எங்ஙனமோவெனின்,--

“கூறிய குன்றினு முதனூல் கூட்டித்
 தோமின் றுணர்த றொல்காப் பியன்ற
 னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.”

இது, பல்காப்பியப் புறனடைச் சூத்திரம்.

“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
 தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
 வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
 ழானாப் பெருமை யகத்திய னென்னு
 மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
 பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
 நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்.”


1. பாசாண்டிகள்--வேதவழக்கொடு மாறுபட்ட சமயிகள். பாசாண்டிகர் எனவும் வழங்கும். “அறுவகைப் பாசாண்டிகரும் இணைவிழைச்சு தீதென்ப” என்பது களவியலுரை.

2. கரிபோக்கல்--சான்று கூறல். Êசிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரைக் குறித்ததுபோலும்

3. அவர்--நக்கீரர்.

4. புலவுத்துறந்த நோன்பு--உடம்பை வெறுத்த விரதம்.