பக்கம் எண் :

688மரபியல்

“கூறிய குன்றினு முதனூல் கூட்டித்
 தோமின் றுணர்த றொல்காப் பியன்ற
 னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.”

என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காயனார் முதலாயினாரை அவ்வாறு கூறாராகலானுமென்பது; என்றார்க்குத் தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல் செய்ததெற்றுக்கெனின்,--அவரும் அவர்செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளுமெல்லாஞ் செய்திலர்; செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனை இவ்வாசிரியர் சுருங்கச்செய்தலின் அருமைநோக்கிப் பகுத்துக் கூறினாராகலானும் 1அவர் தந்திரத்துக்கேற்ப 2முதனூலோடு பொருந்த நூல்செய்தாராகலானும் அமையுமென்பது. பிற்காலத்துக் காக்கைபாடினியாரும் தொல்காப்பியரோடு பொருந்தவே நூல்செய்தாரென்பது; மற்று,

“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
 தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
 வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
 நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்
 யாப்பின திலக்கண மறைகுவன் முறையே.”

எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறுகாக்கைபாடினியார்செய்த நூலினையும் அதன்வழிநூலென்றுமோவெனின்,--ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவுமாற்றாற் 3செய்தாராயின் அது வழிநூலாதற்கு இழுக்கென்னையென்க. இனி, சில குன்றக்கூறினார் தொகுத்து நூல்செய்தாராகலினென்பாரும் உளர். 4ஒழிபொருளவாயினது தொகை யெனப்படாமையின் அங்ஙனங் கூறுதல் நூலிலக்கணமன்றென்பது.

(95)


1. அவர்--தொல்காப்பியர். தந்திரம்--நூல்.

2. முதனூல்--அகத்தியம்.

3. செய்தாராயின் என்னும் பாடமே பொருத்தம்.(S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பு.)

4. ஒழிபொருளவாயின் அது எனப் பிரிக்க. ஒழிபொருள்--சில குறைவுபட்ட பொருள். அது--அந்நூல் தொகை--தொகுத்துச் செய்யப்பட்ட நூல்.