பக்கம் எண் :

பொருளதிகாரம்693

மென்றலும், 1சூத்திரந்தானே பாயிரமில்லாதவழிப் பாயிரம் போல நூன்முகத்து நிற்குமென்றலும், அங்ஙனம் நின்றவழிப் பொதுப்பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமும் உரைவகைத்தாற் பெய்துரைத்தலும், அவ்விருவகைப் பாயிரமுஞ் செய்தார் இன்னாரென்றலுமென் றின்னோரன்ன கோடலாயிற்று. இவையெல்லாஞ் சூத்திரத்தொடு ஒத்த இலக்கணமேயாதலின் ஒத்தவென்னும் மாட்டேற்றானடங்கின.

அவை வருமாறு:

“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்.”

என்னும் பொதுப்பாயிரமும்,

“வடவேங்கடந் தென்குமரி”

(பாயிரம்)

என்னுஞ் சிறப்புப்பாயிரமும், ஒழிந்த சூத்திரங்கள் போல நூற்பாவகவலாகி நூலின் வேறாகி இன்றியமையாவாயின. அவற்றிற்குச்  சூத்திரவுரையொடு மயங்காமல் வேறு உரையும் ஆண்டெழுதப்பட்டன.

“எழுத்தெனப்படும்”

(தொ. எழு. 1)

என்னுஞ் சூத்திரத்தினை 2நிறீஇ, ‘என்பது சூத்திரமெனவும், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின்’ எனவும், ‘இவ்வதிகாரம் யாதனை நுதலியதெனவும், 3அவற்றிற்கு விடை கூறலும், இவ்வதிகாரம் எனைப்பகுதியான் உணர்த்தினானோ வெனின்’ எனவுங் கூறி ஒழிந்த ஒத்திற்கும் இவ்வாறே சூத்திரவுரையோடு பாயிரவுரை மயங்கச் சொல்லியவாறும் அவற்றவற்றுட் கண்டுகொள்க.

இனி, 4இவ்வுரைசெய்தார் யாரோ (வெனின்),--என்ற வழி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரென உரையெழுதினான் பெயர் கூறுதலும் சூத்திரஞ் செய்தான் பெயர் கூறுதலோடு ஒத்த இலக்கணத்ததாயிற்று.


1. சூத்திரந்தானே பாயிரம்போல் நிற்பதையும் பாயிரம் பெய்துரைத்தலையும் இறையனார் களவியலுட் காண்க.

2. நிறீஇ எனவும் எனவியைக்க.

3. அவற்றிற்கு விடை கூறலும் என்பது பின்வரும் கூறி என்பதன் பின் வரல்வேண்டும். இவ்வாறே மாறியெழுதின பல.

4. இவ்வுரை--களவியலுரை. எனின் என்பது சிதைவுற்றதுபோலும்.