பக்கம் எண் :

698மரபியல்

எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுமென்றற்கும் அங்ஙனங் கூறப்பட்டது.

சில்வகை எழுத்தின் செய்யுட்டாகி--ஆடிநிழலின் அறியச் செய்யுங்கால் அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடை கிடப்பச் செய்யப்படாது பொருட்குவேண்டுஞ் சில சொல்லாற் செய்யுஞ் செய்கைத்தாகி; செய்யுளென்றான் அடிவரைச் செய்யுளின் 1வேறுபட்ட பொருட்பாட்டிற்றாகிய அடிவரைப் பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும் வெண்பாவானுஞ் செய்யவும்படுஞ் சூத்திரமென்றற்கென்பது; என்னை? 2மண்டிலப் பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தமையானும்,

“சின்மென் மொழியிற் றாய பனுவல்.”

(547)

வெண்பாட்டாகி வருமாதலானுமென்பது.

சொல்லுங்காலை உரையகத்து அடக்கி -- பொருளானும் போலியானுஞ் சொல்லுவார் சொல்லுங்கால் அவ்வுரையெல்லாந் தன்னகத்தடக்கி,

நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி--பருப்பொருட்டாகிய பாயிரம்போலாது நுண்பொருட்டாகிய பொருள் கேட்டார்க்கு வெள்ளிதன்றி உள்ளுடைத்தாகி,

துளக்கலாகாத் துணைமை எய்தி--முன்னும் பின்னுங் கிடந்த சூத்திரங்களானே தன்னுட்பொருள் இன்றியமையாதாகலெய்தி; எனவே, ஒன்றொன்றனை இன்றியமையாத உறுப்புப்போலச் செய்யல்வேண்டு மென்றவாறாயிற்று.


1. வேறுபட்ட பொருட்பாடு என்றது--பாட்டுக்கள் தம்முள் வேறுபட்ட பொருட்டோற்றமுடைத்தாதலை. வேறுபட்ட இலக்கணமுடைத்தாதல் எனினுமமையும். அடிவரைச் செய்யுளின்--அடிவரையறை கூறுஞ் செய்யுளின்கண். அடிவரைப் பாட்டு என்றது இன்னபாட்டு இத்துணை யடியுடையது என அளவியல் கூறும் ஆசிரிய முதலிய பாட்டுக்களை. அடிவரைச் செய்யுள் என்பது அறுவகைச் செய்யுள் என்றும் பாடமிருந் திருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது.

2. மண்டிலப்பாட்டின்--மண்டிலப்பாட்டான் என்றவாறு: என்றது மண்டிலவாசிரியப்பாவான் சூத்திரஞ் செய்தமையானே சூத்திரங்கள் ஆசிரியப்பாவானுஞ் செய்யப்படுமென்பது உடம்பொடு புணர்த்திய இலக்கணத்தாற் பெறப்படுமென்றபடி.