அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி--அளத்தற்கரிய பெரும் பொருட்டாகி. பல்வகையானும் பயன் தெரிபுடையது--பலவாற்றானும் பொருள் விளங்க வருவது; சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்--இவையெல்லாஞ் சூத்திரத்திலக்கணமென்று முதனூல் செய்த ஆசிரியராற் சொல்லப்பட்டன என்றவாறு. இஃதியல்பெனவே, இவற்றிற் சிறிய வேறுபட்டன விகாரமென்றானாம். “உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை.” (தொ. எழு. 163) என்றவழி, யகரமும் உயிரும் வருவழியெனவே இது நிலைமொழித் தொழிலென்பது, ஆடிநிழலின் அறியத்தோன்றிற்று. இனி, நிலைமொழித் தொழில் வேறு கூறினமையின், “மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி.” (தொ. பாயிரம்) எனப் பாயிர இலக்கணத்துடன் பொருந்துவதாயிற்று. இனி, 1எண்வகையாற் பரந்துபட்ட புள்ளியீற்றுச் சொல்லினையெல்லாம் ‘உகரமொடு புணரும் புள்ளி’யென அடக்கினமையிற் சில்வகையெழுத்தின் செய்யுளுமாயிற்று. ‘யகரமும் உயிரும் வருவழி இயற்கை’யென வருமொழிப் பரப்பெல்லாம் அடக்கினமையின் அதற்கும் இஃதொக்கும்; இதனைப்பற்றியெழுந்த பொய்ப்பொருளும் மெய்ப்பொருளும் பலவாகலின் உரையகத்தடக்கலும் உடைத்தாயிற்று. தொகைமரபினுள்ளும் உயிர் மயங்கியலினுள்ளும் புள்ளி மயங்கியலினுள்ளுங் குற்றியலுகரப் புணரியலினுள்ளும் பரந்து பட்ட பொருளினை நுழைந்து வாங்கிக்கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததூஉமாயிற்று. இச்சூத்திரம் பொருளுரைத்தவழியும் வெள்ளிதன்றி 2உள்ளுடைத்தாகலின் நுண்மையுடைத்தெனவும்பட்டது. “குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும்.” (தொ. 7. 160) என்பதூஉம்,
1. ஞணநமலவளன என்பன. 2. உள்--உட்பொருள் (சூக்குமம்). |