பக்கம் எண் :

பொருளதிகாரம்701

1“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
  வெறியாட் டயர்ந்த காந்தளும்.”

(63)

என்பது தெய்வச் சிறப்பினை அறியுஞ் சிறப்போடு வெவ்வாயுடைய வேலனது வெறியாட்டினை ஆடிய காந்தளுமென்றாற் போல வருவன பலவுங் கொள்க. இங்ஙனங் கூறிய உதாரணங் காட்டல்வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்களென்பது கருத்து. அஃதேல், உதாரணத்தோடு வருங் காண்டிகையிலவோவெனின்,--அது வருகின்ற சூத்திரத்துட் சொல்லுதும். கரப்பில்லதென்னாது முடிவதென்றான், அதனாற் பரந்துபட்ட சூத்திரத்தினை அங்ஙனம் மறுத்துச்செய்யாது தொகுத்துக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்துசெய்தலும் உண்டென்பது கொள்க; அது,

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
 வெறியாட் டயர்ந்த காந்தளும்.”

(63)

என்பது முதலாக இக்கூறப்பட்ட 2இருபத்தொரு துறையுங் கரந்தையெனப்படுமென்றாற்போல மாட்டென்னுஞ் செய்யுளுறுப்பினைத் தோற்றுவாய் செய்துவிடுதல். பிறவும் அன்ன.

(101)

[காண்டிகையுரையின் பகுதி இவ்வாறு வருமெனல்]

657.3விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா
வேது நடையினு மெடுத்துக் காட்டினு
மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே.

இது, மேலதற்கோர் புறனடை; எய்தியதன்மேற் சிறப்பு விதியுமாம்; என்னை? காண்டிகையினை மேலதனோடு இருவகைய என்றமையின்.


1. ‘வெறியறி சிறப்பின்’ என்ற சூத்திரத்துள் (தொல். புற. 5) சொல்லப்பட்ட இலக்கணம் பலவும் பரந்து சேறலின் அச்சூத்திரம் முழுவதற்கும் உரை கூறாது ‘என்றாற் போல (இச்சூத்திரத்துள்) வருவன பலவும்’ என்பதே மறுத்துச் செய்தலாம்.

2. இருபத்தொரு துறையுங் கரந்தையென்று கரந்தையை இருபத்தொன்றாக மாட்டியமை காண்க. இது மறுத்துச் செய்யாது தொகுத்துச் செய்தது.

3. இச்சூத்திரமும் காண்டிகை செய்யு மிலக்கணங் கூறிற்றென்றல் பொருத்தம். இளம்பூரணம் நோக்குக.