மற்று, முதனூலாற் கூறிய பொருள் சில குன்றக் கூறினான்போல முடிந்தநூலாற் கொள்க என்றதென்னையெனின்,--அற்றன்று; இப்பொருண்மை 1முடிந்தநூலினும் உண்டென்று எடுத்துக்காட்டப்படுமென்றானென்பது; இது மேல், “ஏது நடையினு மெடுத்துக் காட்டினும்.” (657) என்றவழிப் பெறுதுமாயினும் முதனூலல்லது எடுத்துக்காட்டப்பெறா அரென்றற்கு ஈண்டு வரைந்து கூறினானென்பது; எனவே, இணைநூலும் அவற்று வழிநூலும் எடுத்துக்காட்டுங்கால் தனக்கு முதல்வராயினாரை நாட்டி அவர் கருத்தேபற்றிப் பிறர் செய்தாரெனினல்லது பிறர்மேல் தலைமை நிறீஇ அவர் கருத்துப்பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ஙனங் கூறின் அவர்நூற்கே உரையெழுதுவானல்லனோவென மறுக்க. இனி, “வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவ” (649) னாற் செய்யப்பட்ட முதனூற்காயின் முடிந்தநூல் எடுத்துக்காட்டுதலென்னும் இவ்விலக்கணமின்றென்பது கொள்க; 2ஒருதலையன்மையென்னும் உத்திவகைபற்றியென்பது. ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கி--ஐயவுணர்வும் பொய்யுணர்வுஞ் செம்பொருளினான் நீக்கி; தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ--அச் செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றெனவும் இரட்டுறுத னீக்கி ஒற்றுமை கொளுத்தியும்; துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்--கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்து 3மாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரையிலக்கணம் என்றவாறு. மறுதலையும் மாற்றமுமென்பது, கடாவிடை; ஐயமும் மருட்கையுஞ் செவ்விதி னீக்கல் ஒருபுடை யொப்புமையுடைய போலியும் அதற்கு ஒன்றும் இயைபில்லாத பொய்ப்பொருளு மெனப்படும். “பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும்.” (தொ. சொ. 105)
1. முடிந்த நூலினு முண்டென் றெடுத்துக்காட்டுவது வலியுறுத்துவதற்கு. அன்றிக் குறைவை நிறைவுசெய்தற்கன்றென்க. 2. ஒருதலையன்மை--நிச்சயமில்லாமை. சொன்னவிதி யாண்டும் ஒருதலையாக வாராமை. 3. மாறுதல்--நிற்றல்; ஒழிதல். |