| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 105 |
ஓதல், தூது என்ற மூன்றன் பகுதிகளிலும் உரிய இடத்துத் தலைவன் கூறும்” எனத் தொகுத்து உணர்த்தும் தொடராயமையும்; ‘மூன்றன்பகுதி’ என்பதற்கு, “இப்பகுதியில் தொல்காப்பியரால் சுட்டி விளக்கப்பெறாத பிற நூல்களிற் கண்ட நால்வகைவலியுள் மூன்றென” இளம்பூரணரும், “அறம், பொருள், இன்பமென”நச்சினார்க்கினியரும் தம்முள் மாறுபட்டு இருவேறு பொருள் கூறுகின்றனர். இவை அறுவகைப் பிரிவிலடங்குதலானும், கூறும் தொகையால் குறிக்கும் வகைகளை நூலில் விளக்காது சூத்திரிப்பது நூன்மரபாகாமையானும், ஈண்டுப் பிரிவு வகை மூன்றும் விளக்கப்பட்டு அவற்றை அடுத்து ‘மூன்றன் பகுதி’ எனத்தொகுத்துக் கூறப்படுதலானும், இத்தொடர் இச்சூத்திரத்தில் தெளிக்கப்பட்ட பிரிவு வகை மூன்றனையே குறிப்பது விளக்கமாகும். இவ்வாறே புறத்திணையியல் (21) “மாற்றரும் கூற்றம்” என்னும் சூத்திரத்திடையில் ‘ஈரைந்தாகும்’ எனத்தொகுத்துப் பிரித்ததும் காண்க. பொருட் பிரிவுப் பகுதிக்கண், ஒருபுறம் பொருட் பிணியால் பிரிய விரும்புதலும், மறுபுறம் காதலால் பிரிவொல்லாது செலவழுங்குதலுமாகத் தம்முள் முரண்படும் இருவேறுணர்ச்சிகள் தலைவன்பால் நிகழுமியல்பை விளக்கிய பகுதி நயந்து பாராட்டற்பாலது. நாளது சின்மையால் பொருளீட்டும் விருப்பம் காதல் பெருக்கால் தகைக்கப்படுவதும், அன்புபற்றித் தலைவி பொருட்டுப் பொருளீட்டும் விருப்பம் அவ்வன்பிற்குரிய தலைவியின் பிரிவருமையால் தகைக்கப்படுவதும், இயல்பாதலின் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியபாலெனப் பொருட் பிரிவில் தலைவன் உள்ளத்தில் நிகழும் விருப்பு தடையுணர்ச்சி முரண் வலியுறுத்தப்பட்டது. ‘உரைத்திற நாட்டம் கிழவோன்மேன’ என்பதை, அப்பாற்பட்ட ஒருதிறத்தானும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கியபாலினும், ஊதியங்கருதிய ஒருதிறத்தானும், தூதிடையிட்ட வகையினானும், மூன்றன்பகுதியும், வினைத்திறவகையினும், ஆங்கோர்பக்கமும், இரத்தலும், தெளித்தலும் என வரும். ஒவ்வொன்றோடும் தனித்தனி கூட்டுக. பொருள், ஓதல், தூது, பகை, காவல், பரத்தை, என அறுவகைப் பிரிவும் வகைபெறக்கூறும் இச்சூத்திரத்தில் முதல் மூன்றையும் ‘மூன்றன்பகுதியு’ மெனத் தொகுத்துப் பிரித்தார்; |