| 108 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இம்மென் பேரலர் நும்மூர்ப் புன்னை வீமல ருதிர்ந்த தேனாறு புலவிற் கான லார்மணன் மரீஇக் கல்லுறச் சிவந்தநின் மெல்லடி யுயற்கே. ” (நற்றிணை. 76) எனவரும் நற்றிணைச் செய்யுளுமதுவே. “புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட் டொலிபன் முத்த மார்ப்ப வலிசிறந்து வன்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு மடப்பிடி தழீஇய தடக்கை வேழந் தேன்செய் பெருங்கிளை யிரிய வேங்கைப் பொன்புரை கவழம் புறந்தரு பூட்டு மாமலை விடரகங் கவைஇக் காண்வரக் ‘கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கட் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே. ” என்னும் நற்றிணைப் (202) பாலைச் செய்யுளுமது. இனி, சுரத்தினதருமை கருதித் தலைவியை விடுத்தற்குச் செய்யுள்: “உமணர், சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை யூர்பாழ்த் தன்ன, வோமையம் பெருங்காடு இன்னா வென்றி ராயின், இனியவோ பெரும தமியோர்க்கு மனையே. ” (குறு. 124) இதில் “என்றிராயின்”, என்பதால், விட்டுப் பிரியும் தலைவன் கூறியதைத் தோழி கொண்டு கூறினாளென்றறிக. இனி, விட்டுச் சென்ற தலைவன் இடைச்சுரத்துத் தலைவியை நினைந்து கூறற்குச் செய்யுள்: “எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கிற் |