பக்கம் எண் :

112நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

நமக்குரைத் தோரும் தாமே;
அழாஅல், தோழி! அழுங்குவர் செலவே. ”

இக் குறுந்தொகை (135ஆம்) செய்யுளில் தோழி கொண்டு கூறிய தலைவன்கூற்றால், ஆடவர்க்குத் தாளாண்பக்கம் இன்றியமையா தென்பதும், மனையற மகளிரின் தகுதி பேணுதல் அவ்வாடவர் கடனென்பதும், இவ்வாறு இருவேறுணர்ச்சி தம்முள் ஒன்றாப் பொருட்பிணியின்கண் தலைவற்குக் கூற்று நிகழு மென்பதும் காண்க.

இன்னும்,

“ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவும்
 சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
 தான்வரல் துணிந்த இவளினும், இவளுடன்
 வேய்பயில் அழுவம் உவக்கும்
 பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே. ”

(பொருள். சூ. 41. நச்சினார். உரைமேற்கோள். )

என்னும் பொருளதிகாரச் சூத்திரம் 41ன் உரைமேற்கோள் செய்யுளாலும், ஒன்றாப் பொருட்பிணியில் தலைவியின் பிரிவருமை தலைவன் கூறுவதறிக.

இனி, இன்மையதிளிவும் உடைமைய துயர்ச்சியும் கருதித் தலைவன் கூறுதற்குச் செய்யுள் :

“ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
 செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ்வினைக்
 கம்மா அரிவையும் வருமோ!
 எம்மை யுய்த்தியோ! உரைத்திசி னெஞ்சே!”

(குறுந். 613)

இச் செய்யுளில், ‘இல்லோர்க்கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி’ என்பதால் இன்மையதிளிவும், ‘அம்மா அரிவையும் வருமோ’ என்றதால் உடைமையாம் காதலின் உயர்வும், தம்முள் ஒன்றாமை தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறிச் செலவு தவிர்வது காண்க.

இனி, இவ்வாறு செலவழுங்காமல் தலைவன் பிரிதலும் உண்டு; அதற்குச் செய்யுள்: