பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை113

“இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
 அசையுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென . . .
 வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை,
 அரும்பவி ழலரிச் சுரும்புண் பல்போ
 தணிய வருதுநின் மணியிருங் கதுப்பென . . .
 எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி,
 மைசூழ் வெற்பின் மலைபல இறந்து
 செய்பொருட் ககன்ற செயிர்தீர் காதலர்
 கேளார் கொல்லோ, தோழி!
 . . . . . . . . . . . . . . . . . . . . .
 . . . . . கார்ப் பெயற் குரலே. ”

எனவரும் நற்றிணைச் (214) செய்யுளில் இவ்வாறு ஒன்றாப் பொருள்வயின் மாறுபட்டலைக்கும் உணர்ச்சி முரண்கூறித் தலைவன் ஒன்றாப் பொருள்வயிற் பிரிந்தமையும் காண்க. “அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்” எனும் பாலைக்கலியுமதுவே.

(பாலைக்கலி. 11)

அன்புமிகையால் மனை மாட்சிக்குப் பொருள் வலித்தலும். தலைவியிற் பிரிவருமையால் செல்லத்துணியாமையுமாகிய ஒன்றாப்பொருட் பிணிக்குச் செய்யுள் :

“மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
 இரும்பனம் பசுங்குடை பலவுடன் பொதிந்து
 பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
 நறுந்தண் ணியளே; நன்மா மேனி
 புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 மணத்தலும் தணத்தலு மிலமே;
 பிரியின் வாழ்தல் அதனினு மிலமே. ”

(குறு. 168)

“மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல்
 குமரி வாகைக் கோலுடை நறுவீ
 மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
 கான நீளிடைத் தானும் நம்மொ
 டொன்றுமணம் செய்தன ளிவளெனில்
 நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே”