பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை117

“நில்லாங்கு நில்லாங்கு” என்னும் மருதக்கலியுள்,
“ஆயும் ஆயிழாய் அன்னவை யானாங் கறியாமை
 போற்றிய நின்னைத் தொடுகு. ”

(கலி. 45)

எனத் தன் பரத்தமைக்குப் புலந்த தலைவியைத் தெளிக்குமுகத்தானும்,

“நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறுதலைப் பெய்து
 கையொடு கண்டாய், பிழைத்தே னருளின்”

(மருதக்கலி. 45)

என இரக்கு முகத்தானும், தலைவன் கூற்று நிகழ்த்தியது காண்க.

சூத்திரம் : 41 
  எஞ்சி யோர்க்கும் எஞ்சுத லிலவே.

கருத்து : இது, முன் சூத்திரங்களிற் கூறப் பெறாப் பிறரும் கூற்றுக் குரியராதல் உண்டு என்று எய்தாத தெய்துவிக்கிறது.

பொருள் : எஞ்சியோர்க்கும் = இதுவரை குறித்துக் கூறப்படாத, செவிலி, பாங்கர், ஆயத்தார், பரத்தையர், வாயிலாவார், பாகன், பாணன் போன்ற பிறர்க்கும்; எஞ்சுதலில = அகத்துறைகளில் கூற்று ஒழிதல் இல்லை.

குறிப்பு : ஈற்றேகாரம் அசை. இவ்வியலில் தலைமகள் கூற்றுத் தனித்துக் கூறப்படாதது சிந்திக்கத்தக்கது. உரையாசிரியர் இளம்பூரணர் ‘தலைமகள் கூற்று உணர்த்திய சூத்திரம், காலப் பழமையால், ஏடு பெயர்த்தெழுதுவார் வீழ எழுதினர்போலும்’ எனக்கூறி, தலைமகள் கூற்றுவரும் பல இடங்களைச் சுட்டி விளக்கியுள்ளார். அகத்துறைப் பாட்டுக்களில் தலைவி கூறுமிடங்கள் பலபடியாகப் பாராட்டப்படுதல் பண்டைப் பாட்டுக்களில் பரக்கக் காணலாம். களவியல் 20ஆம் சூத்திரத்தில் தலைவி கூற்று நிகழுமிடங்களைத் தொல்காப்பியரே கூறியுள்ளார். அவற்றுட் சில துறைகளுக்குச் செய்யுள் வருமாறு:

1. “காணுங்காற் காணேன் தவறாய, காணாக்காற்
 காணேன் தவறல் லவை”
 (குறள். 1286)