| 122 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
நோக்கி ஐந்திணை இலக்கணச் சூத்திரத்தை அடுத்தே கூறி, அவ்வாறு உரிப் பொருளாகும் வேறு சிலவற்றை இச்சூத்திரத்தானும் அடுத்த சூத்திரத்தானும் விளங்க வைத்தார். முன் நிகழ்ந்தது காதலர் பின்நினைப்பிற்கு ஏதுவாதல் அகத்துறையில் இயல்பாம் என்பதை இச்சூத்திரத்தானும், அவ்வாறு நினைத்துக் கூற்று நிகழ்தலும் அகத்துறையின்பாற் பட்டதே என்பதை அடுத்த சூத்திரத்தானும் தொல்காப்பியர் விளக்குகிறார். இனி, இச்சூத்திரமும் அடுத்த சூத்திரமும் காதற் கூற்றுக்குப் பொருளாமாயினும், கொண்டு தலைக்கழிதல் காட்சி முதலியன போலப் பெருவரவின்மையான் அவற்றொடு கூறாது, ஈண்டுக் கூற்று வகைகூறும் சூத்திரங்களொடு இவற்றை இந்நூலார் கூறினாரென்க. நிகழ்ந்தது நினைத்தற்குப் பாட்டு வருமாறு: “யாருமில்லைத் தானே கள்வன் தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ? தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகு முண்டுதான் மணந்த ஞான்றே” (குறு. 25) இது, தலைவி நிகழ்ந்தது நினைத்தற்குச் செய்யுள். இனி, தலைவன் நிகழ்ந்தது நினைத்தற்குச் செய்யுள்: “இரண்டறி கள்விநங் காத லோளே; முரண்கொள் துப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள்; கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. ” (குறு. 312) “அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வாய், |